5161. 

மாலையும்,சாந்தும், கலவையும், பூணும்,
     வயங்கு நுண்தூசொடு, காசும்,
சோலையின்தொழுதிக் கற்பகத் தருவும்,
     நிதிகளும்,கொண்டு பின் தொடர,     
பாலின் வெண்பரவைத் திரை கருங் கிரிமேல்
     பரந்தெனச் சாமரை பதைப்ப,
வேலைநின்றுஉயரும் முயல் இல் வெண் மதியின்,
     வெண்குடைமீதுற விளங்க;

     சோலையின்தொழுதி - சோலையின் தொகுதிபோன்ற; கற்பக
தருவும் -
கற்பக மரங்களும்; நிதிகளும் - சங்கநிதி, பதும நிதி முதலிய
நிதிகளும்; மாலையும் - மாலைகளையும்; சாந்தும் - சந்தனத்தையும்
கலவையும் - (மற்றைய) குங்குமம் முதலான கலவைகளையும்; பூணும் -
ஆபரணங்களையும்; வயங்கு - விளங்கும்; நுண் தூசொடு - நுண்ணிய
ஆடைகளையும்; காசும் - மணிகளையும்; கொண்டு - எடுத்துக்கொண்டு;
பின்தொடர -
பின்பற்றி வரவும்; வெண்பால் பரவை - வெண்மையான
பாற்கடலின்; திரை - அலைகள்; கருங்கிரிமேல் - கரிய மலைமேல்;
பரந்தென -
பரவினாற் போல; சாமரை பதைப்ப - வெண்சாமரை சுழலவும்;
வேலை நின்று -
கடலிலிருந்து; உயரும் - உயர்ந்து செல்லும்; முயல் இல்
வெண் மதியின் -
களங்கமில்லாத வெள்ளிய சந்திரனைப் போல;
வெண்குடை மீதுற விளங்க -
வெள்ளிய குடை மேலே விளங்கவும்.

     இழையும் மாலையும்ஆடையும் சாந்தமும் ஏந்தி உழையர் என்ன நின்று
உதவுவ நிதியங்கள் என்று முன்பு (கம்ப. 4861) பேசப்பெற்றது. பாலின்
வெண்பரவை - இதில் உள்ள 'இன்' அசை.                   (93)