5164.

விரி தளிர், முகை, பூ, கொம்பு, அடை, முதல், வேர்
     இவைஎலாம், மணி, பொனால், விரிந்த
தரு உயர் சோலைதிசைதொறும் கரியத்
     தழல்உமிழ் உயிர்ப்பு முன் தவழ,
திருமகள் இருந்ததிசை அறிந்திருக்கும்,
     திகைப்புறுசிந்தையான், கெடுத்தது
ஒரு மணி நேடும்பல் தலை அரவின்,
     உழைதொறும், உழைதொறும், உலாவி;

     விரிதளிர் -விரிந்ததளிர்கள்; முகை - அரும்பு; பூ - மலர்கள்;
கொம்பு -
கிளைகள்; அடை - இலைகள்; முதல் - அடிப்பகுதி; வேர் -
வேர்; இவை எலாம் - இவை முதலிய உறுப்புகள் எல்லாம்; மணிபொனால் -மணியாலும் பொன்னாலும்; விரிந்த - ஆகிய; தருவுயர் சோலை -
தருக்களால் உயர்ந்த சோலையானது; திசை தொறும் கரிய - திக்குகள்
தோறும் கரியும்படி; தழல் உமிழ் - நெருப்பைக் கக்கும்; உயிர்ப்பு -
பெருமூச்சு; முன் தவழ - முன்னே பரவிச் செல்ல; திருமகள் இருந்த -
பிராட்டியிருந்த; திசையறிந்திருந்தும் - திசையைத் தெரிந்திருந்தும்;
திகைப்புறு சிந்தையான் -
தடுமாறிய உள்ளத்தால்; கெடுத்தது - தவறவிட்ட;
ஒரு மணி நேடும் -
ஒப்பற்ற மணியைத் தேடுகின்ற; பல்தலை அரவின் -
பலதலைகளை உடைய பாம்பைப் போல; உழைதொறும் உழைதொறும் - பலபகுதிகளில்; உலாவி - திரிந்து.                            (96)