5165.

இனையது ஓர்தன்மை எறுழ் வலி அரக்கர்
     ஏந்தல்வந்து எய்துகின்றானை,
அனையது ஓர்தன்மை அஞ்சனை சிறுவன்
     கண்டனன்,அமைவுற நோக்கி,
'வினையமும்செயலும், மேல் விளை பொருளும்,
     இவ் வழிவிளங்கும்' என்று எண்ணி,
வனை கழல்இராமன் பெரும் பெயர் ஓதி
     இருந்தனன்,வந்து அயல் மறைந்தே.

     இனையது - இத்தகைய; ஓர்தன்மை - ஒப்பற்ற (ஆடம்பர)
இயல்புடன்; வந்து எய்துகின்றானை - அங்கு வந்து சேர்ந்த; எறுழ்வலி -
மிக்க வலிமையுடைய; அரக்கர் ஏந்தல் - அரக்கர்களின் தலைவனான
இராவணனை; அனையது ஓர் தன்மை - அப்படிப்பட்ட ஒப்பற்றஇயல்புடைய;
அஞ்சனை சிறுவன் -
அஞ்சனையின் புதல்வனான அனுமன்; கண்டனன் -
பார்த்து; அமைவுற நோக்கி - பொருந்த ஆராய்ந்து; வினையமும் -
இராவணனின் வஞ்சகமும்; செயலும் - (பிராட்டியின்) செய்கையும்;
மேல்விளை பொருளும் -
(அதனால்) பின்னே உண்டாகும் பயனும்; இவ்வழி
விளங்கும் -
இவ்விடத்தில் புலப்படும்; என்று எண்ணி - என்று நினைந்து;
கழல்வனை - வீரக்கழல் அணிந்த; இராமன் பெரும் பெயர் -
 இராமபிரானுடைய புகழை; ஓதி - கூறி; அயல்வந்து - பக்கத்திலே வந்து;
மறைந்து இருந்தனன் -
மறைவாயிருந்தான்.

     மேல் 79 ஆம் பாடல்முதல் 95 ஆம் பாடல் முடியவுள்ள பாடல்களில்
உள்ள 'செய' என் எச்சம் மேல் பாடலில் உள்ள 'உலாவி' என்பதுடன் நிறைவு
பெற்றது. உலாவி என்பது இப்பாடலில் உள்ள எய்துகின்றானை என்பதுடன்
சார்கிறது. பெயர் - புகழ். 'பெரும் பெயர்ப் பெண்டிர்' சிலம்பு (நடுகல் 208)
பெயர் இராமனுடைய பெயர் என்றும் கூறலாம். வால்மீகம் அனுமன் இராமன்
புகழ் ஓதி மரத்தில் இருத்ததாகப் பேசும். அனையது ஓர்தன்மை - உளம்
அறிசுட்டு.                                                 (97)