5166.

ஆயிடை,அரக்கன், அரம்பையர் குழுவும்,
     அல்லவும்,வேறு அயல் அகல,
மேயினன்,பெண்ணின் விளக்கு எனும் தகையாள்
     இருந்துழி; ஆண்டு, அவள், வெருவி,
போயின உயிரளாம் என நடுங்கி,
     பொறி வரி, எறுழ் வலி, புகைக் கண்,
காய் சின, உழுவைதின்னிய வந்த
     கலை இளம்பிணை என, கரைந்தாள்.

     ஆயிடை - அவ்விடத்தில்;அரம்பையர் குழுவும் - தேவ மகளிர்
கூட்டமும்; அல்லவும் - மற்றையர் மகளிர் கூட்டமும்; அயல் - பக்கத்தில்;
வேறு -
வேறாக; அகல - நீங்க; அரக்கன் - இராவணன்; பெண்ணின்
விளக்கு எனும் தகையாள் -
 பெண்களுக்குள் விளக்கு என்று கூறப்படும்
தகுதிபெற்ற பிராட்டி; இருந்துழி - இருந்த இடத்திற்கு; மேயினன் -
அடைந்தான். ஆண்டு - அங்கே; அவள் - பிராட்டி; வெருவி -அச்சம்
அடைந்து; போயின உயிரள் ஆம் என -நீங்கிய உயிரை உடையவள்
போல; நடுங்கி - பதறி; பொறிவரி -புள்ளிகளையும் வரிகளையும்;
எறுழ்வலி -
மிக்க வலிமையையும்; புகைக்கண் - புகை எழும்
கண்களையும்;
 காய்சினம் - எரிக்கும்சீற்றத்தையும் (பெற்ற); உழுவை -
புலியானது; தின்னிய - (தன்னை) தின்னும் பொருட்டு; வந்த - வருதலைப்
பெற்ற; இளம் - இளமையான; கலை பிணை என - ஆண் மானினுக்குரிய
பெண்மான் போல்; கரைந்தாள் - புலம்பினாள்.

    போயின உயிரள்- என்பது 'அருங்கேடன்' என்பது போல் (குறள் 210)
வந்த வடமொழி மரபு. திருக்குறள் நுண் பொருள் மாலை இதனை நன்கு
விளக்கும். (46-பக்கம்) வந்த - வரப்பெற்ற.                      (98)