5168. | 'வாழி சானகி ! வாழி இராகவன் ! வாழி நான்மறை! வாழியர் அந்தணர் ! வாழி நல் அறம்!' என்று உற வாழ்த்தினான்- ஊழிதோறும் புதிதுஉறும் கீர்த்தியான். |
ஊழிதோறும் -யுகங்கள்தோறும்; புதிது உறும் - புதுமையடையும்; கீர்த்தியான் - புகழை உடைய அனுமன்; சானகி - சீதாபிராட்டி; வாழி - வாழ்க; இராகவன் - இராமபிரான்; வாழி - வாழ்க; நான்மறை - நான்கு வேதங்கள்; வாழி - வாழ்க; அந்தணர் - அந்தணர்கள்; வாழியர் - வாழ்க; நல்லறம் - நல்ல தருமம்; வாழி - வாழ்க; என்று - என; உற வாழ்த்தினான் - நன்றாக வாழ்த்தினான். ஊழிக்காலந்தோறும் புதுமை அடையும் புகழாளனான அனுமன் பிராட்டி வாழ்க, பெருமான் வாழ்க, வேதம் வாழ்க, வேதியர் வாழ்க, நல்லறம் வாழ்க என்று வாழ்த்தினான். சானகி, இராகவன் - தத்திதம்; சனகன் புதல்வி; ரகுவின் மரபினன் இதனைப் பிரயோக விவேகம் சாமானிய தத்திதன் (32) என்று கூறும். உயர்ந்த புகழ் அல்லால் --- நிற்பது ஒன்று இல் என்று வேதம் பேசிற்று. கவிச்சக்கரவர்த்தி அதனை ஒளிமயமாக்கினார். (100) |