5079.

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு
                                  அறியாள்;
தூவி அன்னம்மென் புனலிடைத் தோய்கிலா
                                  மெய்யாள்;
தேவுதெண் கடல்அமிழ்து கொண்டு அனங்கவேள்
                                  செய்த
ஓவியம்புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்.

     புனைவது ஒன்றுஅன்றி - உடுத்துக் கொண்டிருக்கும் ஓராடையைத்
தவிர; வேறு - வேறு ஒரு; அம் ஆவி துகில் அறியாள் - அழகிய பால்
ஆவி ஒத்த ஆடையை அறியாது; தூவி அன்ன - மயிலின் தோகை போன்ற
(நீலநிறமுடைய); மென் புனலிடை - தெளிந்த நீரில்; தோய்கிலா மெய்யாள்
-
குளிக்காத மேனியை உடையவளாய்; தேவு - தெய்வத் தன்மை பெற்ற;
தெண்கடல் அமிழ்து கொண்டு - தெளிந்த பாற்கடலில் தோன்றிய
அமுதத்தை மூலப் பொருளாகக் கொண்டு; அனங்கவேள் செய்த -
மன்மதனால் செய்யப்பெற்ற; ஓவியம் - விக்கிரகம்; புகை உண்டதே
ஒக்கின்ற -
புகையால் விழுங்கப் பெற்றதை ஒத்திருக்கின்ற; உருவாள் -
வடிவத்தை உடையாள்.

     ஆவியந்துகில் -பாலாவி போன்ற ஆடை ஆவி அன்ன அவிர் நூல்
கலிங்கம் (சிறுபாண் 469 நச் - உரை) தூவி - மயில் தோகை மயில்
தோகையைத் தூவி என்று பிங்கலம் பேசும். துயில் எழு மயில் ஒன்றின் தூவி
(கம்பர் - வரைக்காட்சி - 7) பிராட்டி வீரன் மேனியை மாறும் இவ் வீங்கு நீர்'
என்றாள் (சூடாமணி 35) தூவி என்பதைக் 'காக்கைச் சிறகு' என்று கூறுவாரும்
உளர். (அடை - பதி) 'தூவி அன்னம் மென்புனல்' என்று பிரித்து அன்னப்
பறவைகள் தங்குவதற்கு உரிய மென்மையான தண்ணீர் என்று வை.மு.கோ.
உரை வகுத்தார். ஓவியம் - விக்கிரகம். கோபுரத்தில் அமைக்கப்பெற்ற சுதைப்
புறாவை ஓவியப் புறா என்பான் கம்பன். செய்த எனும் அடைமொழியால்
ஓவியம் என்பது படிவத்தை (விக்கிரகம்) குறிக்கும். இதனை வடநூலார் 'பூர்ண
சித்ரம்' என்பர். 'ஆவி அம்துகில் புனைவது ஒன்று அன்றி' என்பதை மொழி
மாற்றாது கிடந்தவாறே கொண்டு பாலாவி ஒத்த அழகிய ஆடையை இறுகக்
கட்டுதலாகிய ஒரு செயலை அன்றி வேறு செயலை அறியாள்' எனப் பொருள்
கூறல் சிறந்தது. கணத்துக்குக் கணம் இளைக்கின்ற மேனியாதலின் ஆடை
அணிதலாகிய தொழிலை இடையறாது செய்தல் வேண்டியதாயிற்று என்பது
மயிலம். பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.         (11)