5171. | 'இன்றுஇறந்தன; நாளை இறந்தன; என் திறம் தரும்தன்மை இதால்; எனைக் கொன்று,இறந்தபின் கூடுதியோ ? - குழை சென்று, இறங்கி,மறம் தரு செங் கணாய் ! |
குழை சென்று -காதணியின் பக்கலில் போய்; இறங்கி - திரும்பி; மறம் தரு - கொடுமையைச் செய்யும்; செங்கணாய் - சிவந்த கண்களைப் பெற்ற சீதையே; இன்று இறந்தன - (நீ இரங்குவாய் என்று யான் கருதிய) பல இன்றைய தினங்கள் கடந்து போயின; நாளை இறந்தன - (உன் மனம் மாறும் என்று யான் கருதிய) பல நாளைகள் கடந்தன. என்திறம் தரும் - என்பால் நீவழங்கும்; தன்மை இது - அருள் இப்படி (உள்ளது); எனைக் கொன்று - என்னை வருத்தி; இறந்த பின் - யான் இறந்த பிறகு; கூடுதியோ - சேர்வாயோ. செவியின் குழையைக்கண்கள் தொடுவதாகப் பேசுவது. கவி மரபு. "இடைக்குமிழ் ஈர்ந்து கடைக்குமிழ் ஓட்டி" (சிலம்பு 4-69) "மங்கையர் வதன சீதமதி இருமருங்கும் ஓடிச் செங்கயல் குழைகள் நாடும்" (பெரிய - தடுத்தாட் - 1) (103) |