5176. | 'ஈண்டு நாளும், இளமையும், மீண்டில; மாண்டு மாண்டுபிறிது உறும் மாலைய; வேண்டு நாள்வெறிதே விளிந்தால், இனி, யாண்டு வாழ்வது ?இடர் உழந்து ஆழ்தியோ ? |
ஈண்டு - இந்த உலகத்தில்;நாளும் - ஆயுளும்; இளமையும் - இளமைப் பருவமும்; மீண்டில - திரும்பி வராதவை (அவை); மாண்டு மாண்டு - அழிந்து அழிந்து; பிறிதுறும் - வேறியல்பைப் பெறுகின்ற; மாலைய - தன்மை உடையன; வேண்டும் நாள் - (பிறர்) விரும்பும் உன் இளமைப் பருவம்; வெறிதே - வீணாக; விளிந்தால் - அழிந்தால்;வாழ்வது - (இன்புற்று) வாழ்க்கை நடத்துவது;யாண்டு - எக்காலத்தில்; இனி - (பருவம்) கடந்த பின்; இடர் உழந்து -(சென்றதை எண்ணி) துன்பத்தாற் குமைந்து (அதில்); ஆழ்தியோ -அமிழ்வாயோ. நாள் - ஆயுள்."ஊற்றமும் உடைய நாளும்" (கம்ப,5202) மாலைய - தன்மை உடையன. மாலை -இயல்பு. (108) |