5177.

'இழவு, எனக்கு, உயிர்க்கு எய்தினும் எய்துக,
குழை முகத்து நின்சிந்தனை கோடினால்;
பழக நிற்புறும்பண்பு இவை, காமத்தோடு,
அழகினுக்கு, இனியார் உளர் ஆவரே ?

     குழை முகத்து -குண்டலம்அணிந்த முகத்தை உடைய; நின் -
நின்னுடைய; சிந்தனை கோடினால் - மனம் வேறுபட்டால் (அதனால்);
எனக்கு -
(உன்பால் அன்புற்ற) எனக்கும்; உயிர்க்கு - என்னுடைய
உயிர்க்கும்;  இழவு - அழிவு; எய்தினும் எய்துக - வந்தாலும் வரட்டும்
(அதுபற்றி வருந்தேன்) (ஆனால்) (யான் மறைந்த பின்) பழகி - ஒன்று பட்டு;
நிற்புறும் -
நிலைத்து நிற்கும்; பண்பு இயை - இயல்பைப் பொருந்திய;
காமத்தோடு அழகி்ற்கும் -
காமம் அழகு என்னும் இரண்டிலும் (உனக்கு
இணையாக); இனி யார் - இனிமேல் எவர் (என்னைப் போல்);  உளர் ஆவர்- பிறக்கப் போகின்றார்கள்? 

     இழவு - அழிவு.யான் இறப்பது குறித்து வருந்தினேன். உனக்கு
இணையானவர்கள் இனிப் பிறவார்களே என்று கவலைப்படுகிறேன் என்றான்.
உளராதல் - பிறத்தல். பழகப் பழக நிற்பது காமம் என்றான். அழகுக்கு
அப்பண்பு இல்லை என்றான். மாயும் அழகு நிற்கும் போதே மாயாத காமம்
அனுபவிக்கத் தக்கது என்பது இராவணன் கோட்பாடு.               (109)