5179. | 'வீட்டும் காலத்து அலறிய மெய்க் குரல் கேட்டும்,காண்டற்கு இருத்திகொல் ? - கிள்ளை ! நீ - நாட்டுங்கால்,நெடு நல் அறத்தின் பயன் ஊட்டும் காலத்து,இகழ்வது உறும்கொலோ ? |
கிள்ளை ! -கிளி போன்றவளே; வீட்டும் காலத்து - (மாரீசன்) இராமனைக் கொன்ற போதே; அலறிய மெய்க்குரல் கேட்டும் - கதறிய உண்மையான குரலை கேட்ட பின்பும்; நீ காண்டற்கு - இராமனைக் காண்பதற்காக; இருத்தி கொல் - இருக்கின்றாயோ; நல் அறத்தின் பயன் - நல்ல தருமத்தின் பயனானது; நாட்டுங்கால் - (உன்னை நல்ல நிலைமையில்) நிலை நிறுத்தும் சமயத்திலும்; ஊட்டுங்காலத்து - (உயர்ந்தவற்றை) உண்பிக்கும் சமயத்திலும்; இகழ்வது - அவமதிப்பது; உறுங்கொலோ - உனக்கு ஏற்குமோ. வீட்டுதல் -கொல்லுதல். அறத்தின் பயன் உன்னை நிலை நிறுத்தவும் நல்லனவற்றை ஊட்டவும் நினைக்கிறது. இப்போது நீ அவமதிக்கலாமா? என்றான். நாட்டுங்கால் என்பதற்கு உண்மையைக் கூறுமிடத்து என்று உரை கூறப் பெற்றது. விதி, காட்டும் ஊட்டாது என்பர். இங்கே அறத்தின் பயன் ஊட்டுகிறது என்றான். ஊட்டுதல் - அனுபவிக்கச் செய்தல். 'உறற்பால ஊட்டா கழியும்' என்றார் (குறள் 378) ஹா ! சீதா ! லக்ஷ்மணா ! என்று பெருமாள் உரைத்தது என இராவணன் சொன்னான் என்பது பழைய உரை (அடை - பதி) (111) |