5185.

'மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏக
                                  வேண்டின்,
ஈர்-எழு புவனம்யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன்பகழிவல்லது; அறிந்து இருந்து,-
                             அறிவுஇலாதாய் !-
சீரிய அல்லசொல்லி, தலை பத்தும் சிந்துவாயோ?

     அறிவிலாதாய் -அறிவற்றவனே ! ஆரியன் பகழி - இராமபிரானின்
அம்பு; மேருவை - மகா மேரு மலையை; உருவ வேண்டின் -
துளையிடுதலை விரும்பினாலும்; விண் - ஆகாயத்தை; பிளந்து
ஏகவேண்டின் -
பிளந்து செல்லுதலை விரும்பினாலும்; ஈரெழு புவனம்
யாவும் -
பதினான்கு உலகங்களையும் இன்னும் யாவற்றையும்;
முற்றுவித்திடுதல் வேண்டின் - அழியச் செய்தலை விரும்பினும்; வல்லது -
(அவற்றை நிறைவேற்றும்) ஆற்றல் உடையதாகும்; அறிந்திருந்து - (அதனை)
அறிந்திருந்தும்; சீரிய அல்ல சொல்லி - சிறப்பற்றவற்றைப் பேசி; தலை
பத்தும் -
பத்துத் தலைகளும்; சிந்துவாயோ - சிந்திப் போகச் செய்து
கொள்வாயோ.

     உருவ, ஏக,என்பவை தொழிற்பெயர். எச்சம் போல் தோன்றுகிறது.
தொழிற்பெயர் எச்சம் தோற்றம் பெறுமே இது உரைச் சூத்திரம். சில
சுவடிகளில் உருவல், ஏகல் என்னும் பாடமும் காணப் பெறுகிறது. ஆரியன் -
சிறந்தவன். கும்ப கர்ணன் இராவணனை ஆரிய ! என்று விளித்து பேசினான்.
குற்றாலத்தைத் திரிகூடராசப்பர், கடவுள் ஆரிய நாடு என்று பேசினார்.
இராமன் அம்புக்கே இத்தகைய ஆற்றல் உண்டு என்றால் அவன் ஆற்றல்
அளக்க ஒண்ணாதது என்பது குறிப்பெச்சம். எச்சத்தை வடநூலார் தொனி
என்பர். இப்படிப்பட்ட பாடல்கள் இராவணன் சூழ்ச்சிப் படலத்தும் காணப்
பெறுகின்றன. பிராட்டி இராவணன் தனக்கு உள்ளதாகக் கூறிய ஆற்றலை
இராமன் (கம்ப. 3378) அம்புக்கு உளது என்கிறாள்.                 (117)