5186. | 'அஞ்சினை ஆதலான், அன்று, ஆரியன் அற்றம் நோக்கி, வஞ்சனை மான்ஒன்று ஏவி, மாயையால் மறைந்து வந்தாய்; உஞ்சனைபோதிஆயின், விடுதி; உன் குலத்துக்கு எல்லாம் நஞ்சினைஎதிர்ந்தபோது, நோக்குமோ நினது நாட்டம் ? |
அஞ்சினை -அச்சமுற்றாய்; ஆதலான் - ஆகையினாலே; அன்று - அன்றைய தினத்திலே; ஆரியன் அற்றம் நோக்கி - இராமபிரான் சோர்வுற்ற சமயத்தைப் பார்த்து; வஞ்சனை மான் ஒன்று ஏவி - சூழ்ச்சி வடிவான ஒரு மானை ஏவிவிட்டு; மாயையால் - பொய்த் தோற்றத்தால் (தவவேடத்தால்); மறைந்து வந்தாய் - உன்னை மறைத்துக் கொண்டு வந்தாய்; உஞ்சனை போதியாயின் - தப்பிப் பிழைக்க விரும்பினால்; விடுதி - என்னை விட்டுவிடு;எதிர்ந்த போது - போர் செய்யும் காலத்தில்; உன் குலத்துக்கு எல்லாம் -உன் குலம் முழுமைக்கும்; நஞ்சினை - நஞ்சு போன்ற இராமபிரானை; நினதுநாட்டம் - உன்னுடைய கண்கள்; நோக்குமோ - பார்க்குமா ? மாயை - பொய்த்தோற்றம். அரவு அலங்கலாகத் தோன்றுவது. அற்றம் - சோர்வு. ஈண்டு அற்றம் என்றது பொய்மானை மெய் என்று கருதியது. எதிர்ந்த போது - போரிடும் போது. சூரியன் பெரும் பகைஞனும் சூரியன்மகனும் நேர் எதிர்ந்தனர். (படைத் தலைவர் 50) நஞ்சு போல்பவன் நஞ்சு என்று பேசப் பெற்றான். நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் - என்பர் பரகாலர். அங்கு நாமம் நஞ்சு. இங்கு நாமி நஞ்சு. மாயை இறைவன்முன் இல்லாது போம் என்பது குறிப்பெச்சம். 'யாவையும் சூனியம் சத்து எதிர்' என்று சிவஞான போதம் கூறுகிறது. பெருமாள் கண் வட்டத்திலே நிற்கும் நீ தப்புவையோ ? புலி முன்னே நிற்கும் நாய் போலே, பதினாலாயிரம் பேரைத் தனியே நின்று சூறையாடின தனி வீரத்துக்குப் பிரதிக் கிரியையாக மாரீசனைக் கொண்டு நீ பண்ணின கிருத்திமத்திலே (வஞ்சகத்தில்) கண்டிலோமோ ? அவ் வாண் பிள்ளைகள் நாற்றம் கேட்டு நின்றால் பின்பன்றோ உன்னுடைய வெற்றியும் ஆண் பிள்ளைத் தனமும் காணலாம். பெரியவாச்சான் பிள்ளை விரிவுரை (சுந்தர - 21- 3) (118) |