5190.

'குன்று நீஎடுத்த நாள், தன் சேவடிக் கொழுந்தால்
                                   உன்னை
வென்றவன்புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த
                                   மேரு.
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது,
                              இற்று வீழ்ந்த
அன்று எழுந்துஉயர்ந்த ஓசை கேட்டிலை போலும்
                              அம்மா !

     நீ குன்று எடுத்தநாள் - நீ கயிலாய மலையைப் பெயர்த்த அந்தக்
காலத்தில்; தன் சேவடிக் கொழுந்தால் - தன்னுடைய திருவடியின் கொழுந்து
போலும் விரலால்; உன்னை வென்றவன் - உன்னை அடக்கிய சிவபெருமான்;
புரங்கள் வேவ - முப்புரங்கள் வெந்து போக; தனிச்சரம் துரந்த - ஒப்பற்ற
அம்பை ஏவிய; மேரு - மகா மேரு மலையாகிய வில்; என் துணைக்
கணவன் ஆற்றற்கு -
என்னுடைய ஆதாரமான தலைவனின் வலிமைக்கு;
உரன் இலாது - ஈடு கொடுக்கும் வலிமை இல்லாமல்; இற்று வீழ்ந்த அன்று
-
ஒடிந்து வீழ்ந்த அக்காலத்தில்; எழுந்து உயர்ந்த ஓசை - தோன்றிப்
பெருகிய ஒலியை; கேட்டிலை போலும் - கேட்கவில்லையோ (இது).

     வெல்லுதல் -அடக்குதல். இராமன் இருக்குமிடம் அயோத்தி. அதுபோல்
சிவபிரான் பற்றிய வில் எல்லாம் மேரு. சிவபிரானுக்கு முறியாத வில் இராமன்
பற்ற முறிந்தது. இறைவன் வில்லே முறிந்தது என்றால் நீ அவன் முன் பொடிப்
பொடியாவாய் என்பது குறிப்பெச்சம். இதனை வடநூலார் 'தொனி' என்பர்.
(புறம் 11. குறள் 1090) அம்பி - வியப்படைச் சொல்.              (122)