5193. | 'வெஞ் சின அரக்கரை வீய்த்து வீயுமோ ? வஞ்சனை நீ செய,வள்ளல் சீற்றத்தால், எஞ்சல் இல் உலகுஎலாம் எஞ்சும், எஞ்சும் ! என்று அஞ்சுகின்றேன்;இதற்கு அறனும் சான்றுஅரோ ! |
வெம்சினஅரக்கரை - (அந்த நாள்) கொடுஞ்சினம் பெற்ற அரக்கரை; வீய்த்து - அழித்து; வீயுமோ - அழிந்து படுமா ? நீ வஞ்சனை செய - நீ வஞ்சகச் செயலைச் செய்ய (அதனால்); வள்ளல் சீற்றத்தால் - இராமபிரானின் கோபத்தால்; எஞ்சல்இல் - குறைபாடுகள் இல்லாத; உலகு எலாம் - எல்லா உலகங்களும்; எஞ்சும் எஞ்சும் என்று - அழிந்து போமோ,அழிந்து போமோ என்று நினைந்து; அஞ்சுகின்றேன் - பயப்படுகிறேன்;இதற்கு - இவ்வாறு நான் கருதுவதற்கு; அறனும் சான்று - அற நூல்களேசாட்சியாகும். ஒருவன் தீங்குசெய்தால் அவனும் அவன் குடியும் அழியும் என்று அறநூல்கள் கூறுகிறது. அதனால் உன் குடி அழிவது குறித்து வருந்துகிறேன் என்று பிராட்டி பேசினாள். இங்கு அறம் என்று திருக்குறள் குறிப்பாகப் பேசப்படுகிறது. 'குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்று அன்னார் மாய்வர் நிலத்து (898) என்னும் குறளை ஒப்பு நோக்கவும் - (அண்ணாமலை - பதி) அறம் என்பதற்கு அறக்கடவுள் என்றும் கூறலாம் அரோ - அசை. (125) |