5194.

'அங்கண்மா ஞாலமும், விசும்பும், அஞ்ச வாழ்
வெங்கணாய்!-புன் தொழில் விலக்கி மேற்கொளாய்;
செங் கண் மால்,நான்முகன், சிவன் என்றே
                                 கொலாம்,
எங்கள்நாயகனையும் நினைந்தது ?-ஏழை, நீ !

     அங்கண் மாஞாலமும் - அழகிய இடமுடைய பெரியமண் உலகமும்;
விசும்பும் - விண்ணுலகமும்; அஞ்ச - அச்சமடையும்படி; வாழ் - வாழ்ந்து
கொண்டுள்ள; வெங்கணாய் - கொடியவனே; புன்தொழில் - அற்பத்
தொழிலை; விலக்கி - ஒதுக்கிவிட்டு; மேற்கொளாய் - (யான் கூறுவதை)
பின்பற்றுவாயாக; எங்கள் நாயகன் தனை - எங்கள் தலைவனான
இராமபிரானையும்; செங்கண்மால் - சிவந்த கண்ணைப் பெற்ற திருமால்;
நான்முகன் - நான்கு முகமுடைய பிரமன்; சிவன் - சிவபிரான்; என்றே
கொல் நீ நீனைந்தது -
என்றோ நீ கருதியது (அதனால்); ஏழை - நீ
அறிவற்றவனே.

     இராமபிரானை மும்மூர்த்திகளைப் போல எளியர் என்று கருதியது
அறியாமை. சடாயு, முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர்
இம்மானுடர் ஆதலினால் எத் தேவரோடு எண்ணுவது, என்று கூறினான் (கம்ப.
3416) "முப்பரம் பொருளுக்கு முதல்வன்" என்ற
 பாசுரம் கருதுக (கம்ப.313)
தாங்கள் வழிபடும் தெய்வத்தை மும்மூர்த்திகளாகவும் மும்மூர்த்திகளாகவும்
மும்மூர்த்திகளின் மேம்பட்டவனாகவும் பேசுவது மரபு. மூவர்க்கும்
உன்றனக்கும் வழி முதலே என்பர் மணிவாசகர். (திருவாசகம் 379)
பெரியாழ்வார், மூவர் காரியமும் திருத்தும் முதலவன் (நாவகாரியம்) என்றார்.
காரணகாரிய நிலைபற்றி இ்ங்ஙனம் பேசப்படும். ஆழ்வார்களும்
நாயன்மார்களும் கம்பரும் மயக்கமடையார். (126)