5195. | ' "மானுயர்இவர்" என மனக் கொண்டாய்எனின், கான் உயர் வரைநிகர் கார்த்தவீரியன்- தான் ஒருமனிதனால் தளர்ந்துளான்எனின், தேன் உயர்தெரியலான் தன்மை தேர்தியால். |
இவர் - இந்தஇராமலக்குவர்கள்; மானுயர் என - மனிதர் தானே (வெல்லலாம்) என்று; மனக் கொண்டாய் எனின் - நீ மனத்தில் எண்ணினால்(அது தவறு); கான் உயர் - காடுகளால் உயர்வு பெற்ற; வரை நிகர் -மலையை ஒத்த; கார்த்த வீரியன்தான் - கார்த்த வீரியார்ச்சுனனே; ஒருமனிதனால் - ஒரு மனிதன் ஆகிய பரசுராமனால்; தளர்ந்துளான் எனின் -தோல்வி அடைந்து அழிந்தான் என்றால்; (உன்னை அடக்கிய) தேன் உயர் -தேனாற் சிறப்புப் பெற்ற; தெரியலான் - மாலையணிந்த இராமனின்; தன்மை -இயல்பை; தேர்தி - அறிக. நான் புலத்தியன்மரபினன். இராமலக்குவர்கள் மனிதர்கள். தவம் செய்பவர்கள் என்று இராவணன் கருதினான். பிராட்டி, உன்னை வாட்டியவர்களில் ஒருவன் மனிதன்; மற்றொருவன் தவசி என்று கூறினான். இப்படி ஒரு மெய்ப் பொருளை அண்ணாமலைப் பதிப்பு துலக்கிற்று. தான் ஒரு மனிதனால் - என்பதில் உள்ள 'தான்' என்பது உரை அசை - நேர்தியால் - ஆல் - அசை. மானுயர் - மனிதர். சிறு மானுயர் தம்மை என்றான் (நீலகேசி 408) (127) |