5199.

'இப் பெருஞ் செல்வம் நின்கண் ஈந்த பேர் ஈசன்,
                                 யாண்டும்
அப் பெருஞ்செல்வம் துய்ப்பான், நின்று மா
                           தவத்தின் அன்றே ?
ஒப்பு அருந்திருவும் நீங்கி, உறவொடும் உலக்க
                           உன்னி,
தப்புதி அறத்தை;ஏழாய் ! தருமத்தைக் காமியாயோ ?

     ஏழாய் ! -அறிவற்றவனே ! நின்கண் - நின்னிடத்தில்; இப் பெரும்
செல்வம் -
இந்தப் பெரிய செல்வத்தை;  ஈந்த - வழங்கி; பேரீசன் -
மகாதேவனான சிவபெருமான்; யாண்டும் மாதவத்தின் நின்று -
எப்பொழுதும் பெரிய தவத்தில் நிலைத்திருந்து; அப்பெரும் செல்வம் -
அந்தப் பெரிய செல்வத்தை; துய்ப்பான் அன்றே - அனுபவித்துக்
கொண்டுள்ளான் அல்லவா (அங்ஙனம் இருக்க); ஒப்பரும் திருவும் - ஒப்பற்ற
செல்வமும்; நீங்கி - உன்னை விட்டு விலகி; உறவொடும் - சுற்றத்தோடும்;
உலக்க உன்னி - அழிய நினைந்து; அறத்தைத் தப்புதி - அறத்திலிருந்து
தவறுகிறாய்; தருமத்தைக் காமியாயோ - அறத்தை விரும்பமாட்டாயா?

    சிவபெருமான் தவத்திலிருப்பது வெளிப்படை. அவன் துய்க்கும் செல்வம்
நிலைபேறானது சிவமாயிருத்தல். தப்புதல் - தவறுதல். இறைவன் உனக்குச்
செல்வத்தை வழங்கியது நீ தவத்திலிருந்து உயர்வடையவல்லவா, என்று உரை
கூறினர் பலர். ஈசன் செல்வம் ஈந்தது (நீ) யாண்டும் மாதவத்தின் நின்று அப்
பெரும் செல்வம் துய்ப்பான் அன்றே - எனக் கூட்டிப் பொருள் கொள்வர்.
                                                     (131)