5200.

'மறம் திறம்பாத தோலா வலியினர்எனினும்,
                                 மாண்டார்,
அறம்திறம்பினரும், மக்கட்கு அருள் திறம்பினரும்
                                 அன்றே ?
பிறந்து இறந்துஉழலும் பாசப் பிணக்குடைப்
                           பிணியின் தீர்ந்தார்,
துறந்து அரும்பகைகள் மூன்றும் துடைத்தவர்,
                      பிறர் யார் ? சொல்லாய் !

     மறம் திறம்பாத- வீரத்திலிருந்து விலகிச் செல்லாத; தோலா -
தோல்வியடையாத; வலியினர் எனினும் - வல்லமையுடையவர் என்றாலும்;
மாண்டார் - அழிந்து போனவர்கள்; அறம் திறம்பினரும் - தருமத்திலிருந்துவிலகினவரும்; மக்கள் - மக்களிடம் காட்ட வேண்டிய;
அருள் திறம்பினரும்- கருணையிலிருந்து விலகின வரும்; அன்றே -
அல்லவா ? துறந்து -ஆசைகளை விலக்கி; அரும்பகைகள் மூன்றும் -
கொடியமுப்பகைகளையும்; துடைத்தவர் - அழித்தவர்களே; பிறந்து
இறந்து -
உலகிலே பிறந்தும் இறந்தும்; உழலும் - சுழன்று கொண்டிருக்கும்;
பாசப்பிணக்கு உடை - பாசக்கட்டுடன் கூடிய; பிணியின் தீர்ந்தார் -
நோயிலிருந்து
 விலகினார்கள்; பிறர் யார் - மற்றவர் யார் ? சொல்லாய் -
சொல்வாயாக.

     வலிமை வாழும்என்பது இராவணன் கருத்து. அறம் வாழும் என்பது
பிராட்டியின் கொள்கை. பாசப்பிணக்கு - பாசக்கட்டு. பாசம், கயிறு, பற்று
பாசமாம் பற்று (திருவாசகம்) பாசப் பிணிப்பால் ஆன்மா பசு ஆகிறது.
முப்பகை - காமவெகுளி மயக்கம். அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம்
கொள்பவரோடு ஒன்றாது வாழ்க, என்பது பிராட்டியின் செவியறிவுறுஉ. (132)