5201.

'தென் தமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர்
                            முனிவர் யாரும்,
புன்  தொழில்அரக்கர்க்கு ஆற்றேம்; நோற்கிலெம்'
                            புகுந்த போதே,
கொன்று அருள்;நின்னால் அன்னார் குறைவது
                            சரதம்; கோவே !
என்றனர்; யானேகேட்டேன்; நீ அதற்கு இயைவ
                            செய்தாய்.

     தென்தமிழ்உரைத் தோன் - இனிய தமிழுக்குஇலக்கணம் கூறிய
அகத்தியன்; முன்னா - முதலான; தீதுதீர் - தீமையிலிருந்து விலகிய;
முனிவர் யாரும் - எல்லா முனிவர்களும்; கோவே - தலைவனே; (யாங்கள்)
புகுந்த போதே - அரக்கர்கள் தண்டகாரணியத்துக்கு வந்த காலத்திலிருந்தே;
புன்தொழில் - அற்பத் தொழில் செய்யும்; அரக்கர்க்கு - இராக்கதர்களுக்கு;
ஆற்றேம் - ஈடுகொடுக்க முடியாமல்; நோற்கிலெம் - தவம் செய்ய
இயலாமல் உள்ளோம் - நின்னால் - உன்னால்; அன்னார் - அவ்வரக்கர்கள்;குறைவது - அழிந்துபடுவது; சரதம் கொன்று அருள்
என்றனர் -
உண்மைஅவர்களைக் கொன்று எமக்கு அருளுக என்று
கூறினார்கள்; யானேகேட்டேன் - அவர்கள் மொழியை யானே கேட்டேன்; 
நீ - அதை அறியாதநீயும்; அதற்கு இயைவ செய்தாய் - அம்மொழிக்குத்
தக்க தீமையைச்செய்தாய்.

     புகுந்த போதே -என்ற தொடரை யாங்கள் தண்டகாரணியம் புகுந்த
போதே' என்று பொருள் கூறினர். முனிவர் பேச்சின் இடையே உள்ள
தொடரை மாற்றலாமா. ஏற்பின் கொள்க. புகுந்த போதே - அரக்கர்கள்
வரும்போதே என்றும் பொருள் கொள்ளலாம். புகும் போதே என்பது புகுந்த
போதே என்றது காலமயக்கம் - (சிந்தா 423)
 தமிழ் என்றதுஇலக்கணத்தை.
'தமிழ் தந்தான்' (கம்ப. 2611) என்று முன்பு பேசப் பெற்றது. அகத்தியன்
படைத்தது மொழியன்று. இலக்கணமே.                         (133)