5203. | 'ஆயிரம் தடக்கையால் நின் ஐந் நான்கு கரமும் பற்றி, வாய் வழி குருதிசோரக் குத்தி வான் சிறையில் வைத்த தூயவன் வயிரத்தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் நீஅறிந்திலையோ ? - நீதி நிலை அறிந்திலாத நீசா ! |
நீதி நிலைஅறிந்திலாத நீசா - நீதி நிலையை அறியாதஅற்பனே; ஆயிரம் தடக்கையால் - பெரிய ஆயிரங்கைகளால்; நின் - உன்னுடைய; ஐந்நான்கு கரமும் பற்றி - இருபது கைகளையும் பிடித்து; வாய்வழி - உன்னுடைய வாய்களின் வழியாக; குருதி சோரக் குத்தி - இரத்தம் கொட்டும்படி தாக்கி; வான் சிறையில் வைத்த தூயவன் - சிறந்த சிறையிலே வைத்த தூய கார்த்த வீரியன்; வயிரத் தோள்கள் - வயிரம் பாய்ந்த தோள்களை; துணித்தவன் - வெட்டிய பரசுராமன்; தொலைந்த மாற்றம் - (இராமபிரானுக்கு) தோற்ற செய்தியை; நீ அறிந்திலையோ - நீ அறியவில்லையோ. பரசுராமன்,'ஓராயிரம் உயர் தோள் வயிரப் பணை துணிய தொடு வடிவாய் மழு உடையான்' என்று முன்பு பேசப்பெற்றான். (கம்ப. 1274) உன்னிலும் வலியனான கார்த்தவீரியனை வென்ற பரசுராமன் இராமனால் வெல்லப்பெற்றான் என்றால் உன் நிலையை அறிக என்பது குறிப்பெச்சம். (தொனி) இப்பாடலின் குறிப்புப் பொருளை - "வெள்ளி மால்வரையைப் பறிக்கும் கபடன் பணைப்புயமோ அவன் பைங்கடகம் செறிக்கும் புயஞ்செற்ற ஆயிரம் திண்புயமோ அவற்றைத் தறிக்கும் திறல் மழுமோ சயத்தாருடைத்தே" என்னும் பாடல் வெளிப்படுத்தும். (திருவரங்கமாலை 38) (135) |