'கடிக்கும் வல் அரவும் கேட்கும், மந்திரம்; களிக்கின்றோயை, "அடுக்கும், ஈது அடாது" என்று, ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி, இடிக்குநர்இல்லை; உள்ளார், எண்ணியது எண்ணி, உன்னை முடிக்குநர்;என்றபோது, முடிவு அன்றி முடிவது உண்டோ ?'
கடிக்கும் -(காரணமின்றி) கடிக்கும் இயல்பைப் பெற்ற; வல் அரவும் - கொடும் பாம்பு கூட; மந்திரம் கேட்கும் - மந்திரத்துக்கு அடங்கும்; களிக்கின்றோயை - செருக்குக் கொண்ட உன்னை; ஈது அடுக்கும் - இது செய்யத் தக்கது; (ஈது) அடாது - இது செய்யத்தகாதது; என்று - என்று கூறி (அதை மெய்ப்பிக்க); ஆன்ற - பழமையான; ஏதுவொடு - காரணத்துடன் கூடிய; அறிவு காட்டி - அறிவைக் காண்பித்து; இடிக்குநர் - நெருக்கி வற்புறுத்துபவர்கள்; இல்லை - இங்கே இல்லை; உள்ளார் - (உன் அவையில்) இருப்பவர்கள்; எண்ணியது எண்ணி - நீ கருதியதையே மதித்து; உன்னை முடிக்குநர் - உன்னை அழிப்பவர்களே; என்ற போது - என்று அமைந்த காலத்தில்; முடிவு அன்றி - அழிவு அல்லாமல்; முடிவது உண்டோ - (வேறுவிதமாக) நிறைவேறுவது உள்ளதா ?
"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்" என்னும் குறள் (448) இப்பாடலுக்கு மூலம். இடிப்பார் - கழறுதற் குரியார் (அழகர்) அடிச்சுப் புத்தி சொல்கிற பெரியோர் (பரிதி) 'இராவணன் பாம்பினும் கொடியவன்' என்பது குறிப்பெச்சம். தலைவன் கருதியதையே மதிப்பவர் அமைச்சராய் இருந்து பயனில்லை. வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைத்தல் வேண்டும். (130)