5206. | வளர்ந்ததாளினன்; மாதிரம் அனைத்தையும் மறைவித்து அளந்ததோளினன்; அனல் சொரி கண்ணினன்; 'இவளைப் பிளந்துதின்பென்' என்று உடன்றனன்; பெயர்ந்தனன்; பெயரான்; கிளர்ந்தசீற்றமும், காதலும், எதிர் எதிர் கிடைப்ப. |
வளர்ந்ததாளினன் - வளர்ந்த கால்களைஉடையவனாய்; மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; மறைவித்து - மறையும்படி செய்து; அளந்த தோளினன் - அளாவிய தோள்களை உடையவனாய்; அனல் சொரி - நெருப்பை உமிழும்; கண்ணினன் - கண்களை உடையவனாய்; (கிளர்ந்த இராவணன்) இவளை - இந்தப் பெண்ணை; பிளந்து தின்பென் - பிளந்து தின்று விடுவேன்; என்று உடன்றனன் - என்று சினந்தான்; கிளர்ந்த சீற்றமும் - (மனத்துள்) மிக்கெழுந்த கோபமும்; காதலும்- அடங்கிய காமமும்; எதிர் எதிர் கிடைப்ப - மாறி மாறிப் போரிட(அதனால்); பெயர்ந்தனன் பெயரான் - புறப்பட்டான்-நின்றான் ஆனான். இராவணன்,கொல்ல எழுந்தான். ஆனால் அவள் மாட்டுக் கொண்ட காதலும் சீற்றமும் எதிரெதிரே சந்தித்துப் போராடியதால் திகைத்துப் போனான்; நின்றுவிட்டான். கிடைத்தல் - போரிடுதல். இருபடைகளும் எதிர் கிடைக்கவே (கலிங்கத்து போர் - 3) (138) |