அனுமன் சிந்தனை 5207. | அன்னகாலையில், அனுமனும், "அருந்ததிக் கற்பின், என்னை ஆளுடைநாயகன், தேவியை, என் முன், சொன்ன நீசன்,கை தொடுவதன்முன், துகைத்து உழக்கி, பின்னை, நின்றதுசெய்குவென்' என்பது பிடித்தான். |
அன்ன காலையில்- அந்தச்சமயத்தில்; அனுமனும் - அனுமனானவன்; அருந்ததி கற்பின் - அருந்ததி போன்ற கற்புடைய; என்னை ஆளுடை - என்னை அடிமையாகக் கொண்ட; நாயகன் தேவியை - இராமபிரானின் பத்தினியை; என்முன் - எனக்கு எதிரில்; சொன்ன நீசன் கை - இழித்துப் பேசிய இராவணன் கை; தொடுவதன் முன் - பிராட்டியைத் தொடுவதற்கு முன்பு; துகைத்து - காலாலே மிதித்து; உழக்கி - கையாலே பிசைந்து (கொன்றபின்); பின்னை - மறுபடி; நின்றது செய்குவென் - நிலைத்த நற்பணியைச் செய்வேன்; என்பது - என்னும் எண்ணத்தை; பிடித்தான் - உறுதியாகப் பற்றிக் கொண்டான். என்னை ஆளுடைநாயகன் - இராமபிரான். கவிக்கு நாயகர் இருவரும் (அனுமன், கம்பன்) இங்ஙனம் பேசுவர். (கம்ப. 204.) அனுமன், 'நின்றது செய்குவென்' என்றான். அது அடுத்த பாடல் பேசும். அனுமனும் - உம். அசை. 'காமக்கடல் மன்னும் உண்டே' (குறள் 464, உரை) (139) |