சீற்றம் தணிந்தஇராவணன் பேச்சு. 5209. | ஆண்டு, அவ்வாள் அரக்கன் அகத்து, அண்டத்தை அழிப்பான் மூண்ட கால வெந்தீ என முற்றிய சீற்றம், நீண்ட காம நீர்நீத்தத்தின் வீவுறு நிலையின் மீண்டு நின்று,ஒரு தன்மையால் இவை இவை விளம்பும்; |
ஆண்டு - அப்பொழுது; அ,வாள் அரக்கன் - கொடிய இராவணன்; அகத்து - உள்ளத்தில்; அண்டத்தை அழிப்பான் - அண்டங்களை அழிக்கும் பொருட்டு; மூண்ட - பற்றி எரிகின்ற; வெம்காலத் தீயென - கொடிய காலாக்கினியைப் போல; முற்றிய சீற்றம் - முதிர்ந்த கோபமானது; நீண்ட - மிகுதியான; காமநீர் நீத்தத்தின் - காமமாகிய வெள்ளத்தில்; வீவுறுநிலையின் - அழிந்து போக (அதனால்); மீண்டு - (பிராட்டியைக்) கொல்லவேண்டும் என்னும் நினைவிலிருந்து திரும்பி; நின்று - தாமதித்து; ஒருதன்மையால் - ஒப்பற்ற காமத்தால்; இவை இவை விளம்பும் - இவற்றைப்பேசலானான். தீயைக்காமப்புனல் அவித்தது. "நீர் வந்தால் காம நெருப்பழியும் காணுமே" என்று ஒரு தனிப்பாடல் பேசும். (நீர் சிலேடை) நீத்தம் - வெள்ளம். (141) |