இராவணன் சீதையைஅச்சுறுத்திச் செல்லுதல் 5217. | 'பள்ள நீர் அயோத்தி நண்ணி, பரதனே முதலினோர் ஆண்டு உள்ளவர்தம்மைஎல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின் வெள்ள நீர்மிதிலையோரை வேர் அறுத்து, எளிதின் எய்திக் கொள்வென்,நின் உயிரும்; என்னை அறிந்திலை- குறைந்த நாளோய் !' |
குறைந்த நாளோய்- அற்பஆயுளைப் பெற்றவளே; பள்ளநீர் - அகழி நீரால் சூழப்பெற்ற; அயோத்தி நண்ணி - அயோத்தியை அடைந்து; பரதன் முதலினோர் - பரதன் முதலாக; ஆண்டு - அங்கே; உள்ளவர் தம்மை எல்லாம் - இருப்பவர் யாவரையும்; உயிர் குடித்து - உயிரைப்பருகி; ஊழித்தீயின் - ஊழிக்காலத்து நெருப்பைப் போலச் சென்று; வெள்ளநீர் - மிக்க நீர்வளம் பெற்ற; மிதிலையோரை - மிதிலையின்கண் வாழ்பவரை; வேர் அறுத்து - அடியோடழித்து; எளிதின் எய்தி - எளிதாகத் திரும்பி வந்து; நின் உயிரும் - உன்னுடைய உயிரையும்; கொள்வென் - வாங்குவேன்; என்னை அறிந்திலை - என்னைப்பற்றி அறிந்தாயில்லை. கொள்ளுதல் -வாங்குதல் (கவர்தல்) உயிரை வாங்கி விடுவான் என்னும் வழக்கு நோக்கி அறிக. முதலினோர் - குறிப்பு முற்று. பெயரெச்சப் பொருளில் வந்தது. (149) |