5218.

ஈது உரைத்து, அழன்று பொங்கி, எரி கதிர் வாளை
                                    நோக்கி,
'தீது உயிர்க்குஇழைக்கும் நாளும் திங்கள் ஓர்
                           இரண்டில் தேய்ந்தது;

ஆதலின்,பின்னை, நீயே அறிந்தவாறு அறிதி'
                                    என்னா,
போது அரிக்கண்ணினாளை அகத்து வைத்து,
                            உரப்பிப் போனான்.

(இராவணன்)

     ஈது உரைத்து -இந்தமொழிகளைக் கூறி; அழன்று பொங்கி -
கொதித்துச் சீறி; எரிகதிர் வாளை நோக்கி - (தன் கையில் உள்ள) ஒளிமிக்க
வாளைப் பார்த்து (இந்த வாளே); உயிர்க்கு - உன்னுடைய உயிருக்கு; தீது
இழைக்கும் -
அழிவைச் செய்யும்; நாளும் - முன்பு பேசப்பெற்ற தவணை
நாளும்; திங்கள் ஓர் இரண்டில் - இரண்டு மாதத்தில்; தேய்ந்தது -
முடிவுபெறும்; ஆதலின் - ஆகையினாலே; பின்னை - மறுபடி; நீ - நீ;
அறிந்தவாறு - அறிந்த வழியால்; அறிதி - (துன்பத்தை) அனுபவி; என்று -
என்று கூறி; போது அரிக்கண்ணினாளை - தாமரை மலரில் உள்ள வண்டு
போன்ற கண்களையுடைய பிராட்டியை; அகத்து வைத்து - மனத்திலே
வைத்து (புறத்திலே); உரப்பிப் போனான் - அதட்டிச் சென்றான்.

    பிராட்டிபுல்லைப் பார்த்துப் பேசினாள். இராவணன் வாளைப் பார்த்துப்
பேசினான். அறிதல் - அனுபவித்தல். உற்று அறியும் ஐம்புலன் (திருக்குறள்
1101) போதரிக்கண்ணினாய் - என்பதற்கு, புஷ்பம் போலேயும், மான்
போலேயும் இருந்துள்ள கண். அரி என்பது மான். அன்றிக்கே, பூவிலே வண்டு
இருந்தாற் போல என்றுமாம். அரி என்பது வண்டு. பூவோடே சீறுபாறு
என்றும், கண் என்றுமாம் (திருப்பாவை 13). இராவணன், என்னால்
விதிக்கப்பட்ட தவணை, மாதங்கள் இரண்டே, நீ எனது படுக்கையை ஒப்பி
ஏறிவிடு. இல்லையேல் உன்னை என் சமையற்காரர்கள் துண்டு துண்டாக
வெட்டுவார்கள் என்று பேசியதாக வான்மீகம் பேசும் (சுந்தர - 22) இதுவே,
நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்த என்று பேசப்பெற்றது.         150)