அரக்கியர் சீதையைஅதட்டுதல் 5220. | போயினன்அரக்கன்; பின்னை, பொங்கு அரா நுங்கிக் கான்ற தூய வெண் மதியம்ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றி, தீய வல்அரக்கிமார்கள், தெழித்து, இழித்து, உரப்பி, சிந்தை மேயின வண்ணம்எல்லாம் விளம்புவான், உடன்று மிக்கார். |
அரக்கன்போயினன் - இராவணன்சென்றுவிட்டான்; பின்னை - பிறகு; பொங்கு அரா - குமுறுகின்ற இராகு என்ற பாம்பு; நுங்கிக் கான்ற - விழுங்கிக் கக்கிய; தூயவெண் மதியம் ஒத்த - தூய்மையான சந்திரனைப் போன்ற; தோகையை - மயில்போலும் பிராட்டியை; தீயவல் அரக்கிமார்கள் - தீமை புரிவதில் வல்ல அரக்கிகள்; தொடர்ந்து சுற்றி - நெருங்கிச் சுற்றியிருந்து கொண்டு; தெழித்து - முழக்கி; இழித்து - அவமதித்து; உரப்பி - அதட்டி (பிறகு); சிந்தை மேயின வண்ணம் எல்லாம் - மனம் போனபடிஎல்லாம்; உடன்று விளம்புவான் மிக்கார் - சீறிப் பேசத் தொடங்கினார்கள். இராவணின்கொடுஞ்சொற்களில் இருந்து மீண்ட பிராட்டி இராகுவின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற மதி போன்றிருந்தாள். தொடர்ந்து - நெருங்கி. நிமிர்ந்தும் தொடர்ந்தும் (பரிபாடல் 19-82) என்னும் பகுதி இடையிட்டும் நெருங்கியும் என்று அழகரால் விளக்கப் பெற்றது. நுங்குதல் - விழுங்குதல். 'அரவு நுங்குமதியின் ஐயென மறையும்' (அகம் 114). (152) |