சந்தக் கலித்துறை

5221.

முன் முன் நின்றார், கண் கனல் சிந்த முடுகுற்றார்;
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி,
'கொல்மின் !கொல்மின் ! கொன்று குறைத்து, குடர்
                                     ஆரத்
தின்மின் !தின்மின் ! என்று தெழித்தார், சிலர்
                                     எல்லாம்.

     முன் முன்நின்றார் - பிராட்டியின் முன்னாலேநின்றவர்களாகிய;
சிலர் எல்லாம் -
சில அரக்கிமார்கள்; கண்கனல் சிந்த - கண்களிலிருந்து
நெருப்புச் சிதற; முடுகுற்றார் - (பிராட்டியின்பால்) விரைந்துபோய்; மின்மின்
என்னும் -
மின்னுகின்ற மின்னல் போலும்; சூலமும் வேலும் - சூலத்தையும்
வாளையும்; மிசை ஓச்சி - தலைக்கு மேலே உயர்த்தி (இவளை); கொல்மின்
கொல்மின் -
கொல்லுங்கள் கொல்லுங்கள்; கொன்று குறைத்து - கொன்று
துண்டுகளாக்கி; குடர் ஆர - வயிறு நிரம்ப; தின்மின் தின்மின் -
தின்னுங்கள் தின்னுங்கள்; என்று - என்று கூறி; தெழித்தார் -
அரட்டினார்கள்.

     முடுகுற்றார் -முற்றெச்சம், வினை எச்சப் பொருளில் வந்துள்ளது. மிசை
- தலைக்கு மேலே. ஓச்சி - உயர்த்தி. மின்மின் - மின்னும் மின்னல். வெல்லும்
வேலை வெவ்வேல் என்பதுபோல் வந்தது. குறைத்தல் - துண்டித்தல்.

    இச் சந்தக்கலித்துறை மா - மா - விளம் - மா - காய் என்னும் ஐந்து
சீர்களைப் பெற்றுவரும். இதனை வடநூலார் 'மத்த மயூரம்' என்பர். இத்தகு
பாக்கள் இந்நூலில் 154 இடங்களில் காண்கிறோம் (மணிமலர் 76).     (153)