5236.

'முடியா முடி மன்னன் முடிந்திடவும்
படி ஏழும் நெடுந்துயர் பாவிடவும்,
மடியா நெறி வந்துவனம் புகுதும்
கொடியார் வரும் என்று, குலாவுவதோ ?'

     முடியா - இறப்பு இல்லாத;முடிமன்னன் - முடி சூடிய தசரதன்;
முடிந்திடவும் -
இறந்து படவும்; படி ஏழும் - ஏழு உலகங்களிலும்;
நெடுந்துயர் -
பெருந்துன்பம்; பாவிடவும் - பரவிப் பெருகவும்; (இவற்றால்
மனம் இரங்காமல்) மடியா நெறி வந்து - முடிவற்ற வழியிலே வந்து; வனம்
புகுதும் -
காட்டிலே வாழப்புகுந்த; கொடியார் - கொடியவரான இராமன்;
வரும் என்று -
வந்து காண்பான் என்று (நீங்கள்); குலாவுவதோ -
மகிழ்ச்சியடைவதா.

     மன்னன்இறந்தும், மக்கள் கெஞ்சியும் இரங்காத மனம் என் பொருட்டா,
இரங்கப் போகிறது என்கிறாள். தலைவி, ஊடலால் தலைவனைக் 'கொடியன்'
என்று கூறுவாள். கடுவனும் அறியும் அக்கொடியோனையே (குறுந் - 26)
தமிழ்த்தெய்வம் உ.வே.சா அங்கு வரைந்தவற்றைக் காண்க. கடியன், கொடியன்
நெடியமால் என்று சடகோபர் பேசினார் (திருவாய் 5-3-5) செய்யும் எனும்
வாய்பாட்டு முற்று பலர்பாலில் வாராது. கொடியார் என்று பாடம் கொள்வது
நேரிதன்று; 'கொடியான்' என்ற பாடம் சிறப்புடைத்து.               (9)