5507.

பொறி தரவிழி, உயிர் ஒன்றோ ? புகை உக,
                அயில் ஒளி மின்போல்
தெறி தர, உரும்அதிர்கின்றார்; திசைதொறும்
                விசைகொடு சென்றார்
எறிதரு கடையுகவன் கால் இடறிட, உடுவின்
                இனம் போய்
மறிதர, மழைஅகல் விண்போல் வடிவு அழி
                பொழிலை, வளைந்தார்.

     உயிர் ஒன்றோ -(அவ்வீரர்களின்) பெரு மூச்சுக் காற்று மாத்திரமோ
?; விழி பொறிதா - கண்களினின்று நெருப்புப் பொறி பரக்கவும்; புகை உக -புகையை வெளியே கக்கவும்; அயில் ஒளி மின் போல் செறிதர -
வேலாயுதங்களின் ஒளி மின்னலைப் போல் நெருங்கவும்; உரும்
அதிர்கின்றார் -
இடி போல் முழங்குகின்றவர் களாய்; திசை தொறும்
விசைகொடு சென்றார் -
எட்டுத் திக்குகளிலும் விரைந்து சென்றவர்களாய்;
கடை யுகம் எறிதருவன்கால் இடறிட - கொடிய பெருங்காற்று எற்றி
வீசுதலால்; உடுவின் இனம் போய் மறிதர - நட்சத்திரக் கூட்டங்கள் நீங்கி
விழுந்து விடவும்; மழை அகல் விண் போல் - மேகம் இல்லாத ஆகாயம்
போல; வடிவு அழி பொழிலை - தன்னுருவம் அழிந்த அசோகவனத்தை;
வளைந்தார் - சூழ்ந்து கொண்டார்.

     பொறிதர, புகைஉக, தெறிதர, அதிர்கின்றார். சென்றார் வளைந்தார்
எனச் சொல் முடிவு கொள்க. உடுவினம், மலர்களுக்கும், மழை நீங்கிய விண்,
உருவழிந்த அசோக வனத்துக்கும் உவமை. முன் இரண்டடிகள் கிங்கரர்
சென்றமையையும், பின் இரண்டடிகள் பொழிலின் நிலைமையையும் கூறும். (19)