5246. | 'வருந்தல்இல் மானம், மா அனைய மாட்சியர் பெருந் தவம்மடந்தையர் முன்பு, பேதையேன், "கருந் தனிமுகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர் இருந்தவள்,இவள்" என, ஏச நிற்பெனோ ? |
வருந்தல்இல் -(உயிரைவிட) துன்பம் அடையாத; மானம் மா அனைய- மானமுடைமையின்கண் கவரிமானைப் போன்ற; மாட்சியர் - சிறப்பைப்பெற்ற; பெருந்தவ மடந்தையர் முன்பு - பெருந்தவமுடைய மகளிருக்குமுன்னர்; பேதையேன் - அறிவற்ற யான்; கருந்தனி முகிலினை - கரியஒப்பற்ற மேகம் போல்பவனை; பிரிந்து - பிரிந்து; இவள் - இநத்ச் சீதை;கள்வர் ஊர் இருந்தவள் - கள்வர்கள் வாழும் இலங்கையில் வாழ்ந்தவள்;என - என்று; ஏச நிற்பெனோ - பழித்துப்பேச அதுகேட்டு இருப்பேனோ ? சிறுமயிர்நீப்பினும் வாழாத கவரிமான்போல் சிறு பழிச் சொல்லும் பொறாது பலர் இறப்பர். அவர்கள் முன் யான் பிறர் பழிக்க வாழேன் என்றாள். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா.. என்று பேசியது தமிழ் மறை (குறள்.969) (19) |