5247. | 'அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற, வில் பணிகொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள், "இல் புகத் தக்கலை" என்னில், யானுடைக் கற்பினை, எப்பரிசு இழைத்துக் காட்டுகேன் ? |
அற்புதன் -அதிசயப்பண்புற்ற இராமபிரான்; அரக்கர் தம் வருக்கம் - அரக்கர்களின் குலம்; ஆசு அற - பற்றுக்கோடு இல்லாமல்; வில் பணி கொண்டு - வில்லை ஏவல் கொண்டு; அருஞ்சிறையின் - கொடிய சிறையிலிருந்து; மீட்ட நாள் - மீட்கும் காலத்தில்; இல்புகத் தக்கலை அல்லை - என் வீட்டில் நுழையத் தகுதியுடையை அல்லை என்று; என்னில் - என்று கூறினால்; யானுடைக் கற்பினை - யான் கொண்டுள்ள கற்பை; எப்பரிசு - எந்த வகையால்; இழைத்துக் காட்டுகேன் - நிரூபித்துக் காண்பிப்பேன். ஆசு - பற்றுக்கோடு. குற்றம் என்றும் கூறலாம். பணி கொண்டு - ஏவல் கொண்டால். 'பாவியேனைப் பணி கொண்டாய்' என்பர் மணிவாசகர். "வானவரைப் பணிகொண்ட மருகாவோ" என்பாள் (கம்ப. 2842.) சூர்ப்பணகை - இராமன் வில்லின் பணி கொண்டான் இழைத்தல் - நிரூபித்தல், பரிசு - தன்மை, மீட்ட நாள் - கால மயக்கு, எதிர்காலம் இறந்தகாலமாகப் பேசப்பட்டது. தக்கலை - முன்னிலை ஒருமை எதிர்மறை வினைமுற்று. (20) |