சீதை மாதவிப்பொதும்பர் அடைதல். அனுமன் தோன்றுதல் 5248. | 'ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு' எனா, 'சாதல்காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்; ஈது அலாது இடமும்வேறு இல்லை' என்று, ஒரு போது உலாம்மாதவிப் பொதும்பர் எய்தினாள். |
(பிராட்டி) ஆதலான் -ஆகையினாலே; இறத்தலே - யான் இறப்பது தான்; அறத்தின் ஆறு - அறத்தினால் காட்டப் பெற்ற வழியாகும்; எனா - என்று உறுதிப்படுத்திக் கொண்டு; சாதல் காப்பவரும் - யான் இறப்பதைத் தடுப்பவரும்; என் தவத்தின் - என்னுடைய தவத்தினாலே; சாம்பினார் - மயங்கியுள்ளனர்; ஈது அலாது - இந்தச் சமயம் தவிர; வேறு இடமும் இல்லை - வேறு சந்தர்ப்பம் இல்லை; என்று - என்று தனக்குள் கூறிக்கொண்டு; உலாம் - சூழ்ந்துள்ள; போது - மலர்களைப் பெற்ற; ஒரு மாதவிப் பொதும்பர் - ஒரு குருக்கத்திச் சோலையை; எய்தினாள் - அடைந்தாள். 'ஆதலால்' என்னும் முடிபுநிலைச்சொல் மேலே போந்த (11-20) பத்துப் பாடலை நோக்க நின்றது. அப்பாடல்களில் இறப்பது நன்று' என்னும் முடிவுக்குக் காரணங்கள் நினைக்கப்பெற்றன. போது உலாம் - மலர் சூழ்ந்த. 'தூசு உலாய்க் கிடந்த அல்குல்' (சிந்தாமணி 550) அங்கு இனியர் உலாய் - சூழ்ந்து என்று குறித்தார். (21) |