5249.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
'அண்டர் நாயகன்அருள் தூதன் யான்' எனா,
தொண்டை வாய்மயிலினைத் தொழுது,
                              தோன்றினான்.

     அனுமன் கண்டனன்- அனுமன்பிராட்டியைப் பார்த்தான்; கருத்தும்
எண்ணினான் -
பிராட்டியின் நினைவை ஆராய்ந்து;
 (அதனால்) துணுக்கம்
கொண்டனன் -
திடுக்குற்றான்; மெய்தீண்டக் கூசுவான் - பிராட்டியின்
மெய்யைத் தீண்ட அஞ்சிய அனுமன்; அண்டர் நாயகன் - தேவர்களின்
தலைவனான இராமபிரானின்; அருள் தூதன் யான் - திருவருள் பெற்ற
தூதன் யான்; ஏனா - என்றுகூறி; தொண்டைவாய் - கோவைக் கனிபோலும்
வாயை உடைய; மயிலினை - மயில்போன்ற பிராட்டியை; தொழுது -
வணங்கி; தோன்றினான் - வெளிப்பட்டான்.

     பிராட்டியின்தற்கொலை முயற்சி அனுமனுக்குத் துணுக்கைத் தந்தது.
அவள் செயலைத் தடுக்க வேண்டும் என்றால் மேனி தீண்ட வேண்டும். அது
செய்ய அஞ்சிய அனுமன் 'யான் இராமதூதன்' என்றான். பிராட்டிக்கு
இப்போது வேண்டுவது இராமனின் அருள். அதன் மூலம்தான் அவள் முயற்சி
தடை படும். ஆதலின், அருள் வடிவாக அனுமன் வந்தான். கூசுதல் -
அஞ்சுதல். இலங்கைக் கோமானைக் கூச அடர்த்து (தேவாரம் 3 - 1936 - 8)
வான்மீகத்தில் தன் சடையைக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகப்
பேசப் பெற்றது. தொண்டை - கோவை. ஆதொண்டை - முதல் குறைந்து
நின்றது. தொண்டையங் கனிவாய் மென்சொல் சிற்றிடை (வேதாரணிய புராணம்
விசுவா - 29)                                             (22)