அனுமன் தன்னைஇராமதூதன் என்று மொழிதல்.

5250.

'அடைந்தனென் அடியனேன், இராமன் ஆணையால்;
குடைந்து உலகுஅனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர்உலப்பு இலர்; தவத்தை மேவலால்,
மடந்தை ! நின்சேவடி வந்து நோக்கினேன்.

     மடந்தை -அம்மையே;அடியனேன் - அடியவனான யான்; இராமன்
ஆணையால் -
இராமபிரானின் கட்டளையால்; அடைந்தனென் -  இங்கு
வந்து சேர்ந்தேன். உலகு அனைத்தையும் - எல்லா உலகங்களையும்;
குடைந்து நாடும் -
துருவி உன்னைத் தேடும்; கொட்பினால் - கருத்தினால்;
மிடைந்தவர் -
நெருங்கிப் புறப்பட்டவர்கள்; உலப்பிலர் - அளவற்றவர்கள்;
தவத்தை மேவலால் -
யான் தவப் பயனை அடைதலாலே; நின் சேவடி -
உன்னுடைய திருவடியை; வந்து நோக்கினேன் - வந்து பார்த்தேன்.

     கொட்பு -கருத்து. இராசமாதேவி கூட வைக்கும் கொட்பினள் ஆகி
(மணிமேகலை 21 - 76 -77 தவப்பயன் தவம் என்று பேசப் பெற்றது. காரியம்
காரணமாக உபசரிக்கப் பெற்றது. (திருக்குறள் - உரை - 201)
 குடைதல் -
துருவுதல்.தேடும் பொருள் பூமியில் இலை எனின் உலகைத் தோண்டிப்
பார்ப்பர். அது சகரர் வரலாற்றில் அறிக.                        (23)