5251. | 'ஈண்டு நீஇருந்ததை, இடரின் வைகுறும் ஆண்தகைஅறிந்திலன்; அதற்குக் காரணம் வேண்டுமே ?அரக்கர்தம் வருக்கம் வேரொடு மாண்டில; ஈதுஅலால், மாறு வேறு உண்டோ ? |
நீ ஈண்டுஇருந்ததை - நீ இங்கே இருப்பதை;இடரின் வைகுறும் - துன்பத்தில் கிடக்கின்ற; ஆண்டகை அறிந்திலன் - இராமபிரான் அறிந்தான் இல்லை; அதற்கு - அறிந்திலன் என்பதற்கு; காரணம் வேண்டுமே ? - காரணத்தைக் கூறவேண்டுமல்லவா; அரக்கர் தம் வருக்கம் - அரக்கர்களின் கூட்டம்; வேரொடு மாண்டில - அடியுடன் அழியவில்லை; ஈது அலால் - இதைத்தவிர; மாறு வேறு - மாறுபட்ட காரணம்; உண்டோ - உள்ளதோ. அரக்கர்கள்அழியாமையால் இராமன் உன் செய்தியை அறிந்திலன் என்று அறிய வேண்டும். இப்பாடல், அறியாமைக்குக் காரணம் பேசாமல் அறிந்திலன் என்பதற்குக் காரணம் கூறுகிறது. காரணம் என்றது அனுமான உறுப்பாகிய ஏதுவை. புகையாகிய காரணத்தால் நெருப்பை அறிகிறோம். அரக்கர்கள் அழியாத காரணத்தால் அவன் சீதை நிலை அறிந்திலன் என்பதை அறிக. (24) |