5254. | 'அரக்கனேஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக் குரக்கு இனத்துஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக; இரக்கமே ஆக;வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி, உருக்கினன்உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ?' |
(இவன்) அரக்கனே ஆக- அரக்கனாகவே இருக்கட்டும் (அல்லது); வேறு ஓர் - அரக்கரினும் வேறுபட்ட ஒப்பற்ற; அமரனே ஆக - தேவனாகவே இருக்கட்டும்; அன்றி - அல்லாமல்; குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக - குரக்கு இனத்தைச் சார்ந்த ஒருவனாகவே இருக்கட்டும்; (இவன் பண்பு) கொடுமை ஆக - கொடுமை உடையதாகவே இருக்கட்டும்; (அல்லது); இரக்கமே ஆக - இரக்கம் உடையதாகவே இருக்கட்டும்; (இவன்) இங்கு வந்து - சிறைக்கு வந்து; எம்பிரான் நாமம் சொல்லி - எம்முடைய இராகவன் பெயரைக் கூறி; உணர்வை உருக்கினன் - என்னுடைய உணர்ச்சியை நெகிழச் செய்தான்; உயிர் தந்தான் - உயிரை வழங்கினான்; இதின் உதவி உண்டோ - இதைவிடச் சிறந்த உபகாரம் உள்ளதோ. எம்பிரான்நாமம் சொல்லி உருக்கிய இவன் எவனாக இருப்பினும் கவலையில்லை. இவன் மதிக்கத்தக்கவன் என்று பிராட்டி பேசினாள். எம்பிரான் நாமம் பாலை நிலத்தில் தவிப்பார்க்குக் குளிர் சோலையாய் இருக்கும். திருமாலைப் பாடக்கேட்டு, மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாள், என்பர் பரகாலர். சம்பந்தர் 'பிறையாளன் திருநாமம் பேசுக' என்று சிறையாரும் மடக்கிளிக்குப் பணிப்பர். எம்பிரான் நாமம் கூறுபவர், எந்த நிலையிலிருப்பினும் போற்றத் தக்கவர் என்க. ஆக - வியங்கோள். உருகினால் அன்றி உணர்வு வாராது. உணர்வு வந்தாலன்றி உயிர் அமைதி பெறாது என்பது குறிப்பு. உணர்வு, உணர்ச்சி, அறிவு, ஆன்மா என்னும் பல பொருள் தரும் சொல் அனைத்தும் ஈண்டு ஏற்கும். இவரே அந்தாதியில் 'உயிர் உருக்கும்' என்று பேசுகிறார் (சடகோபரந்தாதி) (27) |