அனுமன் தன் வரலாறுகூறல் 

5256.

ஆய சொல்தலைமேல் கொண்ட அங்கையன்,
                 'அன்னை ! நின்னைத்
தூயவன் பிரிந்தபின்பு தேடிய துணைவன்,
                  தொல்லைக்
காய் கதிர்ச்செல்வன் மைந்தன், கவிக்குலம்
                 அவற்றுக்கு எல்லாம்
நாயகன்,சுக்கிரீவன் என்று உளன், நவையின்
                  தீர்ந்தான்.

(பிராட்டி கூறிய)

     ஆய சொல் -அந்தச்சொல்லை; தலைமேல் கொண்ட - தலையின்
மீது ஏற்றுக்கொண்ட; அம்கையன் - அழகிய கைகளைப் பெற்ற அனுமன்;
அன்னை ! - தாயே; நின்னை - உன்னை; தூயவன் பிரிந்த பின்பு -
இராமன் பிரிந்த பிறகு; தேடிய துணைவன் - தேடிப் பெற்ற நண்பன்;
தொல்லை - பழமையான; காய்கதிர்ச் செல்வன் மைந்தன் - சூரியனின்
புதல்வன்; கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம் - எல்லாக் குரங்குக்
குலத்துக்கும்; நாயகன் - தலைவன்; நவையில் தீர்ந்தான் -
குற்றங்களிலிருந்து விலகியுள்ள; சுக்கிரீவன் என்று உளன் - சுக்கிரீவன்
என்று பேசப்பட்டு  ஒருவன் உள்ளான்.

     அனுமன்,பிராட்டியின் சொல்லையும் தன்கையையும் தலைமேற்
கொண்டான். சொல், அங்கை தலைமேற் கொண்டவன், என்க. விகுதி பிரித்துக்
கூட்டுக. (இங்ஙனம் கூறுவதே ஏற்புடைத்து) பிராட்டியின்
 உள்ளத்தில்நம்பிக்கை
தோன்றப் பேசப்பெற்றது. இராமபிரானுக்கு துணைவலி உண்டு என்று
குறிப்பித்தபடி இராமன் தூயவன். நண்பன் நவையில் தீர்ந்தான் என்க.
'சான்றோர்  சான்றோர் பாலர் ஆப! (புறநா. 218) தேடிய துணைவன் -
உறவு கொண்ட தம்பி என்பது பழையவுரை. அனுமன் தன்னைக் கூறாமல்
தலைவனைக் கூறியது அவனுடைய பண்பை விளக்குகிறது.           (29)