5257. | 'மற்று,அவன் முன்னோன் வாலி; இராவணன் வலி தன் வாலின் இற்று உகக்கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த வெற்றியன்;தேவர் வேண்ட, வேலையை, விலங்கல் மத்தில் சுற்றிய நாகம்தேய, அமுது எழ, கடைந்த தோளான். |
அவன்முன்னோன் -அந்தச்சுக்கிரீவனின் தமையன்; வாலி - வாலியாவான் (அவ்வாலி); தன் வாலில் - தன்னுடைய வாலிலே; இராவணன் வலி - இராவணன் ஆற்றல்; இற்று உக கட்டி - அழிந்து சிதைய வாலிலே கட்டி; எட்டுத் திசையினும் - எட்டுத்திசைகளிலும்; எழுந்து பாய்ந்த வெற்றியன் - நிமிர்ந்து பாய்ந்த வெற்றியுடையவன்; தேவர் வேண்ட - தேவர்கள் வேண்டிக் கொள்ள; வேலையை - பாற்கடலை; விலங்கல் மத்தில் - மந்தரகிரி என்னும் மத்தினாலே; சுற்றிய நாகம் தேய - சுற்றியிருக்கும் வாசுகி தேயும்படி; அமுது எழ - அமிர்தம் தோன்றும்படி; கடைந்த தோளான் - கடைந்த தோளையுடையவன். இப்பாடல்முற்றும் வாலியின் சிறப்பே பேசப்படுகிறது. வாலி இராவணனை வாலால் கட்டியது பல பகுதியில் பேசப்படும். வாலி கடல் கடைந்த செய்தியைச் சிவஞான முனிவர் 'கருங்கழல் வாலி ..... வாலமும் பணமும் இருங்கையில் பற்றி கடைந்தனன் புணரி' என்பர். (காஞ்சிப்புராணம் - மணிகண்டேச 14) தோள் - கை. தோள் ஒரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் என்பர் பட்டினத்தார். (திருவிடை மருதூர் மும்மணிக் கோவை) மற்று - அசை. (30) |