5258. | 'அன்னவன்தன்னை, உம் கோன், அம்பு ஒன்றால் ஆவி வாங்கி, பின்னவற்கு அரசுநல்கி, துணை எனப் பிடித்தான்; எங்கள் மன்னவன்தனக்கு,நாயேன், மந்திரத்து உள்ளேன்; வானின் நல் நெடுங்காலின் மைந்தன்;நாமமும் அனுமன் என்பேன். |
உம்கோன் -உமதுதலைவனான இராமபிரான்; அம்பு ஒன்றால் - ஒருஅம்பினாலே; அன்னவன் தன்னை - அந்த வாலியின்; ஆவி வாங்கி -உயிரைப் போக்கி; பின்னவற்கு - அவன் தம்பியாகிய சுக்கிரீவனுக்கு; அரசு நல்கி - அரச பதவியை வழங்கி (உன்னைத்தேட); துணை எனப்பிடித்தான் -உதவியாகப் பற்றிக் கொண்ட அவனை; எங்கள் மன்னவன் தனக்கு - எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கு; நாயேன் - அடியேன்; மந்திரத்து உள்ளேன் - ஆலோசனைச் சபையில் உள்ளேன்; வானின் - ஆகாயத்திலிருந்து தோன்றிய; நல்நெடுங் காலின் மைந்தன் - நல்ல நீண்ட வாயு தேவனின் புதல்வன்; நாமம் - பெயர்; அனுமன் என்பேன் - அனுமன் என்று பேசப்படுவேன். வானிலிருந்துகாற்று தோன்றிற்று என்று பேசுவது இந்திய மரபு. ஆதலின் வானின் கால் என்று பேசப்பெற்றது. வான் - மூலப்பிரகிருதி இராமபிரான்பால், 'காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன். நாமமும் அனுமன் என்பேன்' (கம்ப. 3765.) என்று பேசினான். இராவணனை வென்ற வாலி இராமபிரானின் ஓர் அம்பால் இறந்தான். ஆதலால் இராவணனின் வலிமை கண்டு கலங்க வேண்டா என்பது குறிப்பு. (31) |