5260. | 'துப்பு உறுபரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த ஒப்பு உறு நாகர்நாடும், உம்பர்நின்று இம்பர்காறும், இப் புறம் தேடிநின்னை எதிர்ந்திலஎன்னின், அண்டத்து அப் புறம்போயும் தேட, அவதியின் அமைந்து போன. |
(அவ்வானரங்கள்) துப்புஉறு -வலிமை மிக்க; பரவை ஏழும் - ஏழு கடல்களும்; சூழ்ந்த- சூழ்ந்துள்ள; பார் ஏழும் - ஏழு உலகங்களையும்; ஆழ்ந்த - கீழேஆழ்ந்திருக்கும்; ஒப்புறு - அழகுமிக்க; நாகர் நாடும் - நாகர் வாழும் பாதாள உலகமும்; உம்பர் நின்று - சுவர்க்க நாடு முதல்; இம்பர் காறும் - இவ்உலகம் வரையிலும்; இப்புறம் தேடி - இவ்வண்டத்திலே தேடிவிட்டு; நின்னை எதிர்ந்தில என்னின் - நின்னைக் காணவில்லை என்றால்; அண்டத்து அப்புறம் போயும் தேட - இந்த அண்டத்துக்கு அப்பாலும் தேட; அவதியின் - காலக் கெடுவுடன்; அமைந்து போன - உடன்பட்டுச் சென்றுள்ளன. எல்லாஉலகங்களையும் கால எல்லைக்குள் அவை தேடி முடிக்கும். அவதி - காலஎல்லை (காலக்கெடு) வானரங்கள் அண்டங் கடந்து செல்லும் ஆற்றல் வாய்ந்தவை என்பது குறிப்பு. இராவணன் பேசிய பேச்சுக்கு நச்சுமுறியாக அனுமன் வழங்கியவை அனைத்தும் பிராட்டிக்கு நம்பிக்கை ஊட்டுபவை. துப்பு - பவளம் என்றும் கூறலாம். ஒப்புற - அழகுமிக்க. ஒப்புடை ஒருவனை உருவழிய.... விழித்தவனே (சம்பந்தர் 262 -7 ) பார் என்றது கடல்களால் சூழப்பெற்ற நாவலந்தீவு முதலானவற்றை, நாடுகள் யாவும் கடலாற் சூழப் பெற்றவை அறிக. தீவுகளின் பெயரை, தீவு ஏழ் அவைதாம் நாவல், இறலி, குசை, கிரௌஞ்சம், புட்கரம், தெங்கு,கமுகாம் என்னக் கழறப் படுமே என்று பொருட்டொகை நிகண்டு பேசும் (தெங்கு - தெங்கம் தீவு; கமுகு - இலவந்தீவு) வானரவீரர்களுக்கு ஒருமாதத்திற்குள் பிராட்டியைத் தேடிவர ஆணையிடப் பெற்றது. 'ஒருமதி முற்றுறாத முன் முற்றுதிர் இவ்விடை' (கம்ப. 4457) எதிர்தல் - சந்தித்தல் (பார்த்தல்) (33) |