5262.

கொற்றவற்கு, ஆண்டு, காட்டிக் கொடுத்த போது
                            அடுத்த தன்மை,
பெற்றியின்உணர்தற்பாற்றோ ? உயிர் நிலை பிறிதும்
                              உண்டோ ?
இற்றை நாள்அளவும், அன்னாய் ! அன்று நீ இழித்து
                              நீத்த
மற்றை நல்அணிகள்காண், உன் மங்கலம் காத்த
                              மன்னோ !

     அன்னாய் -தாயே;கொற்றவற்கு - இராமபிரானுக்கு; ஆண்டு -
கிட்கிந்தையில்; காட்டி - (நீ இட்ட அணிகளை) காண்பித்து; கொடுத்தபோது
-
(யாங்கள், பெருமானிடம்) வழங்கிய போது; அடுத்த தன்மை -
(இராமனைச்) சார்ந்த மெய்ப்பாட்டை; பெற்றியின் - யான் கூறும் இயல்பாலே;
உணர்தற் பாற்றோ - அறிந்து கொள்ளும் எளிமையானதோ; உயிர்நிலை -
உயிரை நிலையில் வைக்க (அணிகள் தவிர); பிறிதும் - மற்றொரு பொருளும்;
உண்டோ - உள்ளதா; அன்று - (இராவணன் உன்னை) கவர்ந்து சென்ற
அன்று; நீ இழித்து நீத்த - நீ கழற்றிப் போட்ட; மற்றை நல் அணிகள் -
நல்ல பிற ஆபரணங்கள்; இற்றை நாள் அளவும் - இன்று வரை; உன்
மங்கலம் -
உன்னுடைய மங்கலநாணை; காத்த காண் - பாதுகாத்தன,
அறிவாயாக.

     உலகில் மங்கலநாண் மற்றைய அணிகலன்களைப் பாதுகாக்கும் இங்கு
மற்றைய அணிகலன்கள் மங்கல நாணைப் பாதுகாத்தன. பெருமான்
அணிகலன்களைக் கண்டபோது அடைந்த மெய்ப்பாட்டைக் கூறி, முற்றும் கூற
இயலாதபடியாலே யாது செப்புகேன் என்றார் கவிச்சக்கரவர்த்தி. அதுவே,
'உணர்த்தற்பாற்றோ' என்று பேசப்பெற்றது. மங்கலம், என்றது மங்கல நாணை.
'மங்கலக் கழுத்துக்கெல்லாம்... அணி' என்று முன்பு பேசப்பெற்றது. (கம்ப.
1123.) காண், மன், ஓ, அசைகள்.                             (35)