5263.

'ஆயவன் தன்மை நிற்க; அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தென்பால் வெள்ளம் இரண்டினோடு
                            எழுந்து சேனை
மேயின படர்ந்துதீர, அனையவன் விடுத்தான்
                            என்னை,
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு' என்றனன்,
                            பழியை வென்றான்.

    ஆயவன் தன்மைநிற்க - அந்த இராமனின் தன்மை இப்படியிருக்க;
தென்பால் - தெற்குத் திசையில்; ஏயவன் - (சுக்கிரீவனால்) ஏவப்
பெற்றவனும்; வாலி மைந்தன் - வாலியின் புதல்வனும் (ஆகிய); அங்கதன் -
அங்கதன் என்பவன்; இரண்டு வெள்ளம் சேனையோடு - இரண்டு
வெள்ளஞ்சேனையுடன்; எழுந்து படர்ந்து - எழுச்சி பெற்றுப் பரவி; மேயின
தீர -
வந்தவைகள் முடிவு போகச் செல்ல; அனையவன் - அந்த அங்கதன்;
பாய்திரை - பரவிய அலைகளால் சூழப்பெற்ற; இலங்கை மூதூர்க்கு -
இலங்கைக்கு; என்னை விடுத்தான் - என்னை அனுப்பினான்; என்றனன் -
என்று கூறினான் (கூறியவன்); பழியை வென்றான் - பழிக்கப்படும்
புலன்களை வென்ற அனுமன்.                                (36)