5270.

'தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணைப்பணிமிசை மேகம் அன்னவன்
பூங் கணைக்காற்குஒரு பரிசுதான் பொரு,
ஆம் கணைக்குஆவமோ, ஆவது ? அன்னையே !

     அன்னையே ! -தாயே; வீங்கு - பூரிக்கின்ற; பணி அணை மிசை -
பாம்புப் படுக்கை மேலே; தாங்கு அணை - நீரைத் தடுக்கும் கரையின் கண்
உள்ள; பணிலமும் - சங்கையும்; வளையும் - சக்கரத்தையும்; தாங்கும் -
ஏந்திய; நீர்மேகம் அன்னவன் - நீர் சுரக்கும் மேகம் போலும்
இராமபிரானின்; பூங்கணைக் காற்கு - அழகிய கணைக்காலுக்கு; கணைக்கு
ஆம் ஆவமோ -
அம்புகட்கு இருப்பிடமாகிய தூணியோ; ஒரு பரிசு - ஒரு
பண்பால்; பொரு ஆவது - ஒப்பாவது.

    'கணைக் காற்கு, ஆவமோ பொரு ஆவது' என்று முடிக்க. ஆவம் -
அம்பறாத்தூணி. பரிசு - தன்மை. இங்கு பரிசு என்றது மேலே விரிந்து கீழே
சுருங்கியிருக்கை. அம்பறாத் தூணிக்கு வடிவ ஒப்புமையன்றி வேறு
பண்பில்லை
என்க.ஆவம் அழிக்கும் கணைகட்கு இருப்பிடம். இவன் கணைக்கால் ஆக்கும்
திறம் பெற்றது. ஆதலால் ஒப்பாகா என்க. கணைக்காலுக்கு அம்பறாத்தூணி
ஒப்பு. அம்புபெய் தூணி... போன்ற கணைக்கால் (உவமான. 12) தான் -
அவை.                                                 (43)