5272.

'வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலஞ் சுழிஎன்றலும் புன்மை; பூவொடு
நிலம் சுழித்துஎழு மணி உந்தி நேர், இனி,
இலஞ்சியும்போலும் ? வேறு உவமை யாண்டுஅரோ ?

     பூவொடு - தாமரைப் பூவையும்;நிலம் - பூமியையும்; சுழித்து எழு -
கிளர்ந்து தோன்றிய (பெருமானின்); மணி உந்தி நேர் - அழகிய உந்திக்குச்
சமமாக;  வலம் சுழித்து - வலப்பக்கம் சுழித்துக்
 கொண்டு; ஒழுகும்நீர் -
பெருக்கெடுக்கும் தண்ணீரை; வழங்கும் - உலகங்கட்குத் தரும்; கங்கையின்
-
கங்கையின்; பொலஞ்சுழி என்றலும் - அழகிய சுழி என்று கூறுவதும்;
 புன்மை - இழிவாகும் (அங்ஙனம் இருக்க) (திருவுந்திக்கு); இனி இலஞ்சியும்
-
மகிழம்பூவும்; போலும் - ஒப்பாகுமோ (இவற்றைத் தவிர); வேறு உவமை -
வேறுபட்ட உவமானப் பொருள்கள்; யாண்டு - எங்கே உள்ளது.

    மிக்க உந்திநீர்ச்சுழி (உவமான 77) புனற்சுழி அலைத்துப் பொருந்திய
கொப்பூழ் (பெருங் 2-15-68) என்றும், நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
(பொருநராற்று - 37) என்றும் பழம் பெரு நூல்கள் உந்தியை நீர்ச்சுழி என்று
பேசின. இராமனைத் திருமாலாகவே அனுமன் பேசுகின்றான். ஆதலின்
'பூவொடு நிலம் சுழித் தெழுமணி உந்தி' என்றான். சுழித்தெழுதல் -
மகி்ழ்ச்சியின் மிகுதியை உணர்த்தும். சேக்கிழார் அறாத செந்தீ வலம்
சுழிவுற்று... ஒளிர என்று பேசியது கருதுக. (பெரிய திருநீல நக்க 31) இலஞ்சி -
மகிழம்பூ - குருகை இடம் கொண்டான் இலஞ்சி பெற்றோன் (மாறனலங் 359)
போலும் - என்பதை எடுத்தல் ஓசையால் ஐயப்பொருள் தோன்றப் படித்து
உண்மை உணர்க. அரோ - அசை.                              (45)