அறுசீர் விருத்தம் 5279. | ' "ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய் நாரம் உண்டுஅலர்ந்த, செங் கேழ் நளினம்" என்று உரைக்க நாணும்; ஈரம் உண்டு,அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும், மூரல் வெண்முறுவல் பூவாப் பவளமோ, மொழியற்பாற்றே ? |
ஆரமும் அகிலும்நீவி - சந்தனக்குழம்பும் அகிற் குழம்பும் பூசப்பெற்று; அகன்ற தோள் அமலன் - விரிந்த தோள்களைப் பெற்ற இராமபிரானின்; செவ்வாய் - சிவந்த வாயானது (தனக்கு நிகராக); நாரம் உண்டு - நீரை உட்கொண்டு; அலர்ந்த - மலர்ந்துள்ள; செங்கேழ் நளினம் என்று உரைக்க - சிவந்த நிறமுடைய தாமரை போலும் என்று கூறினால்; நாணும் - வெட்கம் அடையும்; (அங்ஙனம் இருக்க) ஈரம் உண்டு - ஈரத்தன்மை பெற்று; அமுதம் ஊறும் - அமுதம் பெருகி; இன் உரை இயம்பாதேனும் - இனிய மொழிகள் பேசாவிடினும்; வெண்மூரல் - வெள்ளிய பற்களால்; முறுவல் பூவா - புன்னகை மலராத; பவளம் - பவளமானது; மொழியற் பாற்றோ - உவமையாகக் கூறத்தக்கதோ ? சிரிக்கத்தெரிந்த தாமரையே ஒவ்வாதபோது சிரிக்கத் தெரியாத பவளம் ஒவ்வாதென்க. 'சிரித்த பங்கயம்' என்று முன்பு பேசப்பெற்றது நினைக்க. நாணுதல் 'தாமரை' என்றும் கூறலாம். ஆரம் - சந்தனம். இங்கே குழம்பைக் குறிக்கிறது. அகிற்கும் அதுவே. நாரம் - தண்ணீர். நார .. பொய்கை (சூடாமணி 25) பவளமோ, ஓகாரம் அசை. பாற்றோ, ஓகாரம் வினாப் பொருள் தந்தது. பவளம் மொழியற் பாற்றோ என முடிக்க. ஈரம் - அன்பு. 'இன்சொலால் ஈரம் அளைஇ' என்று தமிழ்மறை பேசும் (திருக்குறள் 91) மூரல் - பல். முறுவல் - புன்னகை. பூவா - மலராத. 'புதியதோர் முறுவல் பூத்தாள்' (கம்ப. 2736) என்று பேசப் பெற்றது. (52) |