அறுசீர் விருத்தம்(வேறு) 5280. | 'முத்தம்கொல்லோ ? முழு நிலவின் முறியின் திறனோ ? முறை அமுதச் சொத்தின்துள்ளி வெள்ளி இனம் தொடுத்தகொல்லோ ? துறை அறத்தின் வித்து முளைத்தஅங்குரம்கொல் ? வேறேசிலகொல் ? மெய்ம் முகிழ்த்த தொத்தின்தொகைகொல் ? யாது என்று பல்லுக்குஉவமை சொல்லுகேன் ? |
பல்லுக்கு உவமை -இராமபிரானுடைய பற்களுக்கு உவமைகள்; முத்தங் கொல்லோ - முத்துக்களோ; முழுநிலவின் - முழுமதியினுடைய; முறியின் திறனோ - துண்டுகளின் வகைகளோ; அமுதச் சொத்தின் - அமுதமாகிய செல்வத்தின்; துள்ளி - துளியும்; வெள்ளி இனம் - வெள்ளியின் கூட்டமும்; முறை - முறையாக; தொடுத்த கொல் - தொடுக்கப் பெற்றனவோ; துறை அறத்தின் - பல்வேறு வகைப்பட்ட அறத்தினுடைய; வித்து - விதையிலிருந்து; முளைத்த அங்குரங்கொல் - தோன்றிய முளைகளோ; மெய்முகிழ்த்த - சத்தியத்திலிருந்து தோன்றிய; தொத்தின் தொகைகொல் - பூங்கொத்தின் கூட்டமோ; வேறே சிலகொல் - இவற்றில் வேறுபட்ட சிலபொருள்களோ; யாது என்று - (இவற்றுள்) எது என்று; சொல்லுகேன் - கூறுவேன். இராமபிரான்பற்களுக்கு உவமைகள் முத்து முதலானவற்றுள் யாது என்று கூறுவேன். முறி - துண்டு. 'நிலவின் வெண்முறி' (கம்ப. 4892) அறம் முப்பத்திரண்டு, பெருமான் பற்களும் முப்பத்திரண்டு ஒப்பிட்டுக் காண்க. மெய் - உண்மை. அறத்தின் வித்து என்றது அகிம்சையை. எல்லா அறங்களும் அகிம்சையடிப்படையில் தோன்றியன. அறத்துக்கு மூலம் அகிம்சை என்க. இப்பாடலில், அகிம்சையும் சத்தியமும் பேசப்பெற்றன. கொல்லோ - ஓ அசை. சொத்து - இது முதலில் பொன்னை உணர்த்திப் பின் செல்வத்தை உணர்த்திற்று. சொத்துற்று அமைந்த சுதை இல் நெடுஞ்சுவர் (பெருங்கதை 1- 34-231) தொத்து - கொத்து துறையறம் - பல்வகைப் பிரிவுடைய அறம். அங்குரம் - முளை. (53) |