5286. | இன்னமொழிய, அம் மொழி கேட்டு, எரியின்இட்ட மெழுகு என்ன, தன்னை அறியாதுஅயர்வாளை, தரையின்வணங்கி, 'நாயகனார் சொன்ன குறி உண்டு; அடையாளச் சொல்லும் உளவால், அவை, தோகை அன்ன நடையாய்,கேட்க ! என, அறிவன்அறைவான் ஆயினான்; |
(அனுமன்) (பெருமான்அழகை) இன்ன மொழிய- இப்படி எடுத்துக்கூற; அம்மொழி கேட்டு - அச்சொற்களைக் கேட்டு; எரியின் இட்ட - நெருப்பில் இடப்பட்ட; மெழுகு என்ன - மெழுகைப் போல; தன்னை அறியாது அயர்வாளை - தன்னையே அறிந்து கொள்ளாமல் வருந்தும் பிராட்டியை; அறிவன் - அறிவுமிக்க அனுமன்; தரையின் வணங்கி - பூமியில் விழுந்து வணங்கி; தோகை அன்ன நடையாய் - மயில் போலும் நடையை உடைய அம்மையே; நாயகனார் சொன்ன குறி உண்டு - இராமபிரான் என்பால் வழங்கிய பொன் அடையாளம் உண்டு; அடையாளச் சொல்லும் உள - அடையாளச் சொற்களும் உள்ளன; அவை கேட்க என - அவற்றைக் கேட்டு அறிக என்று; அறைவான் ஆயினான் - சொல்லத் தொடங்கினான். அறிவன் -அனுமன். தோகை - மயில். மகளிர் நடைக்கு மயிலின் நடை ஒப்பு. மணி வரைச் சாரல் மஞ்ஞைபோல அணிபெற இயலி (பெருங்கதை 3-13- 50-57) தோகை அன்னநடை என்று விரித்து மயிலையும் அன்னத்தையும் ஒத்த நடை என்றும் கூறலாம். நாயகன் என்னும் பெயர் முன் ஆர் வந்தது. அஃது இயற்பெயர் முன்னர் வந்த ஆரைக்கிளவியாகும் (சொல் 272) நச்சர் உரை அறிந்து அமைக. அவர் பெரும்பான்மை இயற்பெயர் கூறவே சிறுபான்மை உயர்திணைப் பெயர் முன்னரும் வருதல் ஒன்றென முடித்தலால் கொள்க என்பர். 'குறிகளும் அடையாளமும்' என்பர் அப்பர். அஃது இங்கு கவிச்சக்கரவர்த்திக்கு கைகொடுத்தது. மெய்ப்பொருள் ஆய்க. அனுமன் தெரிந்துரைத்த அடையாளம் என்பர்பெரியாழ்வார் (பெரியாழ்வார் 3-10-10) சொன்ன குறி என்பதற்குத் தங்கம் உணர்த்தும் அடையாளம் என்று பொருள் கொள்க. சொன்னம் - பொன். பொன் இங்கு திருவாழியை உணர்த்திற்று. 'ஒரு கையிலே அன்னம் ஒரு கையிலே சொன்னம், வருகையிலே சம்மான வார்த்தை' (பெருந்தொகை 1366) சொன்ன குறி என்பதற்குச் சொல்லிய குறிப்பு என்றே பலர் உரை கண்டனர். (59) |