5288.

' "நீண்டமுடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை
                                 செல்வம்
பூண்டு, அதனைநீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர்ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?" என, இசைத்ததும் இசைப்பாய்.

     நீண்டமுடிவேந்தன் - நீண்ட முடிதரித்ததசரதச் சக்கரவர்த்தியின்;
அருள் ஏந்தி - கட்டளையை ஏற்று; நிறை செல்வம் பூண்டு - அரசச்
செல்வத்தை ஏற்றுக் கொண்டு; அதனை நீங்கி - அரசாட்சியை விட்டுவிலகி;
நெறி போதலுறும் நாளின் - வழியிலே போகும் நாளிலே; ஆண்ட நகர் -
முன்னோர்கள் ஆட்சி புரிந்த அயோத்தியில்; ஆரையொடு வாயில் அகலா
முன் -
மதிலுடன் கூடிய வாயில் கடப்பதற்கு முன்; கான் யாண்டையது என
-
காடு எங்கே உள்ளது என்று; இசைத்ததும் - பிராட்டி வினவியதையும்;
இசைப்பாய் - (அனுமானே) கூறுவாயாக.

     முடியை, நீள்முடி,என்றும் நெடுமுடி என்றும் கூறுவது கவிச்
சக்கரவர்த்தியின் இயல்பு. மதில் மணிக்கடை கடந்திடுமுன் .... வெங்கானம்
யாதோ ? எனச் சொல்லினாள்... சொல்லுவாய் என்று நாட விட்ட படலம்
(கம்ப. 4518) கூறும். இது சிலம்பிலிருந்து கவிச்சக்கரவர்த்தி யறிந்தது. பத்தினித்
தெய்வம் 'மதுரை மூதூர் யாது என வினவ, (சிலம்பு நாடு காண் 41) இதுவே
புகழேந்தி நளனின் மக்கள் மொழியாகப் பேசியது நன்று - குழந்தைகள்
'வழியானது எல்லாம் கடந்தோமோ' என்று வினவும். ஆரை - மதில்.
வண்கிடங்கு சூழும் ஆரை வைசயந்த நகரிலே, என்பர் நிரம்ப அழகிய
தேசிகர் (சேது புராணம் சீதை.5.)                              (61)