அனுமன்திருவாழியைக் காட்டலும் பிராட்டியின்நிலையும் 5290. | ' "மீட்டும் உரை வேண்டுவன இல்லை" என, "மெய்ப் பேர் தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; செவ்வே, நீட்டு இது" என,நேர்ந்தனன்' எனா, நெடிய கையால், காட்டினன் ஓர்ஆழி; அது வாள் நுதலி கண்டாள். |
மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற வேண்டியவை இல்லை என்று; மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்; தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்; (ஆன) இது - இந்தத் திருவாழி; செவ்வே நீட்டு என - செவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி; (இராமபிரான்) நேர்ந்தனன் - என்பால் வழங்கினான்; எனா - என்று கூறி (அனுமன்); நெடிய கையால் - நீண்ட கைகளில்; ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை; காட்டினன் - காண்பித்தான்; அது - அந்த மோதிரத்தை; வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய பிராட்டி; கண்டாள் - பார்த்தாள். நீட்டு -திருமுகம் (கடிதம்) சித்திர சேனன் நீட்டு அவிழா (உபதேச காண்டம்; சிவத்துரோகம் 174) அமரர் கம்பனடிப்பொடி, 'நீட்டு' என்பதற்குக் குறிப்பு மொழி அடங்கிய ஓலை என்று பொருள் கூறிக் கல்வெட்டை ஆதாரம் காட்டுவர். அவர், நீட்டோலை வாசியா நின்றான்... மரம்' என்னும் பாடலை மேற் கோள் நினைவு கூர்வர். (63) |